

ரெயில்களில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி அவர்கள் ஆன்லைன் மூலமாக லோயர் பெர்த் (Lower Berth) எளிதாக முன்பதிவு செய்யும் புதிய திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில், குடும்பமாக, நண்பர்களாக, தனிநபராக என பலரும் தங்களுக்கு ஏற்றவாறு பயணம் செய்து வருகின்றனர்.
பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.
இந்நிலையில் ரெயில் பயணிக்கும் கர்ப்பிணிப் பெண் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரெயில்வே வாரியம் இனி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகளிலும் அவர்களுக்கு லோயர் பெர்த் சீட்களை ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்குக் லோயர் பெர்த் சீட்களை பதிவு செய்யும் வசதியைத் தங்கள் இணையதளங்களில் சேர்க்க தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு, ரெயில்வே தகவல் அமைப்பு மையத்திற்கும் (CRIS) இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்திற்கும் (IRCTC) ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை, ரெயில்வே கவுண்டர்களில் ஆஃப்லைன் முறையில் மட்டுமே கர்ப்பிணிப் பெண்கள் இந்த வசதியைப் பெற முடிந்தது.
அங்கு லோயர் பெர்த் சீட் பெற, பதிவுசெய்த மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட கர்ப்பத்திற்கான சான்றிதழை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் கர்ப்பிணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டெல்லி ஐகோட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் எதிரொலியாக, இந்த நடைமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இனி கர்ப்பிணி பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாகவே இந்த வசதியை டிஜிட்டல் முறையில் சுலபமாக பெறலாம். இதனால் கர்ப்பிணி பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் குறைவதுடன், பயணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவதும் எளிதாகும்.
இத்தகைய பயணிகளைத் தவிர, மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்காகவும் லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் இந்த வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு அது கிடைக்காமல் இருந்து வந்தது.
மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதியைப் போலவே, லோயர் பெர்த் ஒதுக்கீட்டின் கீழ் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவு முறைகள் மூலம் கர்ப்பிணிப் பெண்களும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேவையில்லை என்றாலும், பயணத்தின் போது தகுதியான மருத்துவ பரிசோதகர் வழங்கிய சான்றிதழை கர்ப்பிணி பயணிகள் கைவசம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது ‘லோயர் பெர்த் ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யும் நபர்கள் வயதுச் சான்றையோ (மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள்) அல்லது கர்ப்பிணிகள் மருத்துவச் சான்றையோ காட்ட தவறினால், 1989-ம் ஆண்டின் ரெயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 138-ன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது, மூத்த குடிமக்கள் & 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ரெயில் பயணத்தின் போது தங்களுடைய வயதுச் சான்றை (ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற சான்று) கையில் வைத்திருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரிடம் பெற்ற முறையான மருத்துவச் சான்றை (Medical Certificate) சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை ஆன்லைன் புக்கிங்கில் லோயர் பெர்த் கிடைக்காத பட்சத்தில், ரெயிலில் ஏதேனும் லோயர் பெர்த்கள் காலியாக இருந்தால், டிக்கெட் பரிசோதகர்கள் தங்களின் கையடக்க கணினி மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை ரெயிலிலேயே ஒதுக்கீடு செய்து தருவார்கள் என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
முக்கிய விதிகள் மற்றும் சலுகைகள்:
* 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தானியங்கி ஒதுக்கீடு (Automatic Allotment) மூலம் லோயர் பெர்த் கிடைக்க இந்திய ரெயில்வே வழிவகை செய்துள்ளது.
* ஆன்லைனில் ஐஆர்சிடிசி (IRCTC) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, "Book only if one lower berth is allotted" போன்ற விருப்பங்களை தேர்வு செய்வதன் மூலம் லோயர் பெர்த் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிக்கலாம். எனினும், பொது ஒதுக்கீட்டில் (General Quota) இருக்கைகள் காலியாக இருந்தால் மட்டுமே லோயர் பெர்த் கிடைக்கும்.
* விருப்பத் தேர்வு எதுவும் செய்யப்படாவிட்டாலும், இடங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த படுக்கைகள் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்குத் தானாகவே ஒதுக்கப்படும்.
ரெயில்வே வாரியத்தின் இந்த டிஜிட்டல் அறிவிப்பு கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரெயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு, லோயர் பெர்த் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.