

நாட்டில் குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், தவறுகளை உடனுக்குடன் கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட போது, கடந்த அக்டோபர் 5-ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் மனித மலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செய்தார். இருப்பினும் விஷயம் அறிந்த மாணவர்களின் பெற்றோர் அக்டோபர் 8-ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். இதற்கு முன்பு இதே திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் ஆர். பூர்ணிமா, “இந்த விவகாரத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இதுவரை எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த எவ்வளவு செலவாகும். அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டியது அவசியம்.
இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பள்ளிகளில் குடிநீர்த் தொட்டி அமைந்துள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமா என்பது குறித்து தமிழக அரசிடம் ஆலோசித்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் முறையாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற அவலங்கள் நடப்பதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றும். அரசுப் பள்ளிகளை நவீன மயமாக்க பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகையால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மாணவர்களின் உடல்நலன் சார்ந்த விஷயம் என்பதால், தமிழக அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும்.