

தமிழ்நாட்டின் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் இன்று காலை முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றாலும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட தற்போது குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 5 முனைப் போட்டி நிலவுவதால் யாருக்கு வெற்றி சாதகமாக இருக்கும் என்பதைக் கணிப்பதே கடினமாக இருக்கிறது.
இந்நிலையில் வேட்பாளர்கள் 5 பேரில் 4 பேருக்கு மதுராந்தகம் தொகுதியில் ஓட்டு இல்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.
1. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு திருப்போரூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.
2. திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு சென்னை எழும்பூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.
3. அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு செங்கல்பட்டு தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.
4. சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தான் வாக்குரிமை உள்ளது.
இதன் காரணமாக இந்த 4 வேட்பாளர்களால் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனுக்கு மட்டுமே மதுராந்தகம் தொகுதியில் வாக்குரிமை இருப்பதால், அவர் மட்டுமே இன்றைய இடைத்தேர்தலில் வாக்கு செலுத்துவார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தேர்தலின் போது எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவ்வகையில் மதுராந்தகம் தொகுதியில் வாக்குரிமை இல்லாத 4 வேட்பாளர்கள், தங்களுக்காக வாக்களிக்க முடியாத சூழலில் உள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தவெக சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறங்கிய மரகதம் குமரவேல், வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
சட்டமன்ற தேர்தலில் பாமகவின் ஆதரவு அதிமுகவிற்கு இருந்தது. ஆனால் இடைத்தேர்தலில் பாமக ஆதரவு இல்லாததால், அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தற்போது தவெகவுடன் இருப்பதால், திமுகவுக்கான வாக்கு சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இடைத்தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.