

தமிழ்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் தகுதியான மகளிருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இரண்டாவது கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதன்படி வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதற்கேற்ப உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பல லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம், அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட இருப்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை விரைந்து சேர்க்கவும், அவர்களின் தகுதியை ஆராயவும் களப்பணியில் அதிகாரிகள் இறங்கினர். இதன்படி தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு டிசம்பர் 12 ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது.
டிசம்பர் 12-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், விளையாட்டு, சுய உதவி குழுக்கள், வெற்றி நிச்சயம், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள், நலம் காக்கும் ஸ்டாலின் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனைப் படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொண்டு வரும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மதியம் 3 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளார்.
இந்த விழாவில் 2022-ல் சீனாவின் காங்சோவில் நடந்த மாற்றுதிறனாளிகள் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற துளசிமதி முருகேசன் மற்றும் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியின் போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கததை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பலருக்கும் இம்மாதம் உதவித் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது