

இந்திய அளவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதோடு புகைப் பிடிப்பதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புகைப் பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றை புகைக்கும் போது வெளிவரும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதை ‘Second-hand smoke’ என்பார்கள். புகைப் பிடிக்கும் பழக்கமே இல்லாமல் இருந்தாலும், புகைப் பிடிப்பவர்களுக்கு அருகில் இருக்கும் போது தானாகவே அந்த பாதிப்பை இவர்களும் சுமக்க வேண்டிய சூழல் தான் தற்போது நிலவுகிறது.
புகைப் பிடிக்காத நபர்களுக்கும் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பை இது 20% - 30% வரை அதிகரிக்கிறது. நச்சுப் புகையைத் தொடர்ந்து சுவாசித்தால், இரத்த நாளங்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்தியாவில் மட்டும் புகைப் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசித்து, அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககை 1990-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 50% உயர்ந்துள்ளது.
இதில் 2023-ம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என ‘தி லான்செட் பப்ளிக் ஹெல்த்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், Second-Hand Smoke பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தில் மட்டுமல்ல, Second-Hand Smoke என்ற பாதிப்பிலும் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகையே பிடிக்காமல் நோய்களுக்கு ஆளாகும் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் தனிமனித ஒழுக்கமும், விழிப்புணர்வும் அவசியம். புகைப் பிடிப்பவர்களின் அருகில் செல்லாமல் இருப்பதே இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி.
பொது இடங்களில் புகைப் பிடிப்பது குற்றம் என ஆங்காங்கே வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், சிலர் இதனை மீறுகின்றனர். ஆகையால் பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தடுக்கும் விதமாக அரசு கடுமையான விதிகளை வகுக்க வேண்டியது அவசியம்.
உங்கள் குடும்பத்தில் புகைப் பிடிக்கும் பழக்கம் யாருக்கேனும் இருந்தால், இந்த கெட்டப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.
புகைப் பிடிப்பவர்களும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இருக்கும் போது புகைப் பிடிப்பதைத் தவிர்க்க முன்வர வேண்டும். இன்று நம்மில் ஏற்படும் சிறு மாற்றம் கூட, நாளை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
புகைப் பழக்கம் இல்லாதவர்கள் இனி புகைப் பிடிக்கும் போது அவர்களின் அருகில் எக்காரணம் கொண்டும் செல்லாதீர்கள். அவர் உங்கள் நண்பராக இருந்தாலும் சரி; உறவினர்களாக இருந்தாலும் சரி. குறிப்பாக வீட்டிற்குள் எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் புகைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.