

உலகில் நல்ல விஷயங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். நம்பினால் நம்புங்கள். இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது:
டயானா சார்லஸ் என்ற பெண்மணி வழக்கம் போல காலை நேர நடைப்பயிற்சியை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறு தீவான டாஸ்மானியாவில் ஸ்டான்லி கடற்கரையில் செய்து கொண்டிருந்தார்.அப்போது கடல் நீரில் ஒரு ஆச்சரியமான வஸ்துவைப் பார்த்தார். ஒரு பாட்டில் ஒன்று அலையில் புரண்டவாறு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது! அது கடலில் கிடைக்கும் ஒரு பெரிய நத்தைக் கூடால் சுற்றப்பட்டிருந்தது.
ஆவல் மீதூற அதை எடுத்துப் பார்த்தார் டயானா. என்ன ஆச்சரியம்!அந்த பாட்டிலுக்குள் ஒரு சின்னக் குறிப்பு இருந்தது!
அதை எடுத்துப் பார்த்தார். அது ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. டயானாவுக்கு ஸ்பானிய மொழி தெரியாது. இருந்தாலும் அவர் விடவில்லை.
அவரது சகோதரர் அப்போது தான் சிலியிலிருந்து திரும்பி இருந்தார் – ஒரு ஸ்பானிய மொழி அகராதியுடன்! வார்த்தை வார்த்தையாக எழுதி அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சித்தார்கள். பிறகு ஸ்பானிய மொழி தெரிந்த ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொன்னார்: “வாழ்க்கை எனக்கு எல்லாமே முடியும் என்று கற்பித்திருக்கிறது; அன்பைப் பெறுங்கள்; வெற்றி அடுத்த பட்சம் தான்!
மிகவும் கஷ்டப்பட்டு அதில் இருந்த கொலம்பியா முகவரி, பெயர், பேக்ஸ் நம்பரையும் கண்டுபிடித்து அவர் தந்தார்.அனுப்பியவர் பெயர் எரிகா பொயெரோ.
இந்தப் பெண்மணி நான்கு வருடங்களுக்கு முன்னால் நார்வேக்கு அருகில் அவர் சென்ற கப்பல் சென்ற போது பாட்டிலைக் கடலுக்குள் எறிந்திருக்கிறார். 1997ம் ஆண்டு நார்டிக் நாடுகளுக்குச் சென்ற பொயெரோ ஒரு நாள் மாலை போர் அடித்த சமயம் வேடிக்கையாக பல குறிப்புகளை எழுதி பல பாட்டில்களில் அடைத்து கடலில் வீசி எறிந்தார். பிறகு அந்த விஷயத்தை அடியோடு மறந்து விட்டார்.பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரது தந்தை அவரிடம் ஒரு ஆச்சரியமான செய்தியைச் சொன்னார்.
“ஏய்! உனக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பேக்ஸ் வந்திருக்கிறது!”
பொயெரோவுக்கு ஒரே திகைப்பு! “எனக்கு ஆஸ்திரேலியாவில் யாரையுமே தெரியாதே!” என்றார் அவர். பிறகு தான் பாட்டில்கள் பற்றி அவருக்கு நினைவு வந்தது.
“இப்படி நடக்கும் என்று யாருக்காவது தெரியுமா? கோடிக்கணக்கான பேர்கள் உலகில் வாழ்கிறார்கள். விதி தான் இப்படிப் பலரைச் சேர்த்து வைக்கும் போலும்!” என்று இப்படி பின்னால் அவர் கூறினார்.“ஆஹா! இது ரொம்ப அழகா இருக்கு” என்ற அவர் தொலைதூர நட்பை ஆரம்பித்தார். அடுத்த 25 வருடங்கள் நட்பு தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.குழந்தைகள் பிறந்த பிறகு பொயெரோ ஜெர்மனிக்கு வந்தார். பின்னர் சமீபத்தில் அவர் கோலாலம்பூருக்கு வந்த போது அவர் டயானாவைக் கூப்பிட்டு தான் டாஸ்மானியாவிற்கு வர விரும்புவதாக ஒரு இன்ப அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.
டாஸ்மானியாவில் அவர் டயானாவைப் பார்த்த போது நெடுநாள் பழகிய ஒருவரைப் பார்த்தது போல் தான் அவருக்கு இருந்தது. இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர்.அடுத்த நாள் இருவரும் காலை நேரத்தில் பாட்டில் கண்டெடுக்கப்பட்ட அதே கடற்கரைக்கு உலாவச் சென்றனர். அவர்கள் ஸ்டான்லி டிஸ்கவரி மியூசியத்திற்கும் சென்றனர். ஏனெனில் அங்கே தான் அவரது “பாட்டில் செய்தி” பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது! இப்போது தான் எழுதிய செய்தியை அவர் சரியாக மொழிபெயர்த்து டயானாவிற்குத் தெரிவித்தார்:அது இது தான் - வாழ்க்கை எனக்கு எல்லாமே முடியும் என்று கற்பித்திருக்கிறது; நீங்கள் எங்கிருந்தாலும் அதிர்ஷ்டம் உங்களை வந்தடையட்டும்.”
ஒரு சின்ன பாட்டில் ஆழ்ந்த நட்பை உலகின் இரு வேறு இடங்களில் ஏற்படுத்தியதை உலக மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்! உலகின் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இது தான் முக்கிய அதிசயச் செய்தி!