

தொழில்நுட்ப உலகில் மருத்துவத் துறையிலும் பல்வேறு நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முந்தைய காலங்களைக் காட்டிலும், தற்காலத்தில் மருத்துவ சிகிச்சைகள் மிகவும் எளிதாகி விட்டன.
நவீன கருவிகளின் உதவியோடு, நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். அவ்வகையில் இதுவரை யாருமே செய்யாத ஒரு மகத்துவம் வாய்ந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்துள்ளனர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, தாயின் கருவறையில் இருந்த 25 வாரக் குழந்தைக்கு முதுகுத் தண்டு குறைபாட்டைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சையை டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
மருத்துவ உலகில் முதுகுத்தண்டு குறைபாட்டை சரிசெய்வது என்பது மிகப்பெரிய சிகிச்சையாகும். இதற்கு அதிக செலவாகும். பிறந்த குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு இந்த நோய் இருந்தாலே அதனை சரி செய்வது மருத்துவர்களுக்கு சவாலானதாக இருக்கும்.
அப்படி இருக்கும் போது இன்னும் பூமியில் பிறக்காத ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட ‘மைலோமெனிங்கோசீல்’ முதுகுத்தண்டு குறைபாட்டை சிகிச்சையின் மூலம் சரி செய்துள்ளனர் மருத்துவர்கள்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்றிணைந்து, சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
மைலோமெனிங்கோசீல்:
முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் ஆகியவை முழுமையாக மூடப்படாமல் இருக்கும் ஒரு தீவிரமான நரம்புக் குழாய பிரச்சினை தான் மைலோமெனிங்கோசீல். இதனால் குழந்தையின் முதுகுப் பகுதியில் நரம்புகள் மற்றும் தண்டுவடம் வெளியே தெரியும்.
இந்தப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவில்லை எனில், குழந்தை பிறந்த பின் மூளையில் நீர் கோர்த்தல், கால்களில் பக்கவாதம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் தீவிர பிரச்சினை உள்ளிட்ட வாழ்நாள் முழுவதும் நீடிக்கக் கூடிய நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கருவிலேயே அறுவை சிகிச்சை:
முதுகுத்தண்டு குறைபாடு பிரச்சினை இருந்தால் குழந்தை பிறந்த பிறகு அறுவை சிகிச்சை செய்வது தான் வழக்கமான நடைமுறையாக இருந்தது.
இருப்பினும் கருப்பையில் இருக்கும் பனிக்குட நீரால் வெளியே தெரியும் நரம்புகள் தொடர்ந்து சேதமடையும். இதனைத் தடுக்க கர்ப்ப காலத்திலேயே சிகிச்சையைச் செய்வது குழந்தையின் வருங்கால இயக்கத் திறனை மேம்படுத்தும் என மருத்துவர்கள் கருதினர்.
இதன் காரணமாகவே 25 வாரக் குழந்தைக்கு மருத்துவர்கள் சவால் நிறைந்த சிகிச்சையை செய்ய முடிவெடுத்து, வெற்றிகரமாக முடித்தும் காட்டினர்.
சிகிச்சையின் சவால்கள்:
* மிகக் கடினமான அறுவை சிகிச்சையின் போது தாய் மற்றும் சேய் இருவரின் இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது அவசியம்.
* இரத்த ஓட்டம் மற்றும் பனிக்குட நீரின் அளவைத் துல்லியமாகக் கண்காணிக்க மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு அவசியம்.
* கருப்பையை கவனமாகத் திறந்து, குழந்தையின் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரியும்படி நிலைநிறுத்தி மிக நுண்ணிய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்ய வேண்டும்.
அறுவை சிகிச்சை முடிந்ததும், பிரசவ காலம் வரை குறைப் பிரசவம் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும். தற்போது கருவில் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், அடுத்ததாக பிரசவ காலம் வரை கர்ப்பிணி பெண்ணை தொடர்ந்தே கண்காணிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.