விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்! இனி OTP இல்லாமலேயே பயிர் காப்பீடு பண்ணலாம்!

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்! மத்திய அரசு கொடுத்த மிகப்பெரிய விலக்கு!
பயிர் காப்பீடு
Crop insurance
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 1-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு மற்றும் விவசாயி அடையாள எண் கட்டாயமில்லை என மத்திய அரசு இன்று (நவம்பர் 14) அறிவித்துள்ளது.

சர்வர் கோளாறு காரணமாக பயிர் காப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதோடு பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பில் இருந்தும் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது ஆதார் ஓடிபி மற்றும் விவசாயி அடையாள எண்ணுக்கு விலக்கு அளித்துள்ளது. இதன்மூலம் இனி விவசாயிகள் விவசாய அடையாள எண் மற்றும் ஆதார் அடிப்படையில் ஓடிபி இல்லாமலேயே பயிர் காப்பீடு செய்ய முடியும்.

விலக்கு அளிக்கப்பட்டதற்கான காரணங்கள்:

* தொழில்நுட்பச் சிக்கல்கள்:

விவசாயி அடையாள எண்’ பதிவு செய்யும் பணிகள் இன்னமும் கூட பல கிராமங்களில் முழுமையடையாமல் இருக்கின்றன. இதனால் பல விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

* ஆதார் ஓடிபி சிரமங்கள்:

மத்திய அரசு விதிகளின்படி ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம். அப்போது தான் ஆதார் அடிப்படையிலான ஓடிபி-யை பெற முடியும். ஆனால் இன்னமும் கூட பல விவசாயிகள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

* கால அவகாச நெருக்கடி:

சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நெருங்கி வந்த சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விவசாயிகள் காப்பீடு செய்யாமல் உள்ளனர்.

விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:

* விரைவான பதிவு:

விவசாயிகள் இனி விவசாயி அடையாள எண் இல்லாமலேயே பயிர் காப்பீட்டை விரைவாக செய்ய முடியும்.

* ஆதார் ஓடிபி தேவையில்லை:

பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி ஆதார் அடிப்படையிலான ஓடிபி தேவையில்லை. இதனால் கைரேகை பதிவு அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாகவே எளிதாக பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

* கடைசி நேர நெரிசல் குறையும்:

தொழில்நுட்ப கோளாறு மற்றும் ஓடிபி தாமதத்தால், பயிர் காப்பீடு செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள் அனைவரும் இனி எவ்வித தடையுமின்றி காப்பீடு செய்ய முடியும் என்பதால், கடைசி நேர நெரிசல் குறையும்.

Crop Insurance For Paddy
crop insurance
இதையும் படியுங்கள்:
பயிர் வளர்ச்சிக்கும், அதிக மகசூலுக்கும் உதவும் 'ஜீவாமிர்தம்'!
பயிர் காப்பீடு

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

* சிட்டா மற்றும் அடங்கல்

* ஆதார் கார்டு நகல்

* வங்கி கணக்கு விவரங்கள்

* தகவல் தொடர்புக்கு பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்

எங்கு விண்ணப்பிக்கலாம்?

* தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

* பொது சேவை மையங்கள்

* தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கும் சூழலில், விவசாயிகள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? கடைசி தேதி நீட்டிப்பு.! முழு விவரம் இதோ.!
பயிர் காப்பீடு