17 Years in Coma! தாயாக மாறிய மாமியார்: நெஞ்சை உருக்கும் நிஜக்கதை!

17 ஆண்டுகள் கோமா - மருமகளை மீட்டெடுத்த சீன மாமியாரின் நெகிழ்ச்சிக் கதை
A woman in China has touched hearts
A woman in China has touched heartssource:scmp.com
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன், தபால் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 2010-ல் ஓய்வு பெற்றவர். 1985 முதல் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். 75 கதைகள், 5 கதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு வென்றவர்.

Updated on: 

பொதுவாக நாம் எல்லோரும் கேள்விப்படுவது "தாயன்பிற்கு எல்லை உண்டோ?" என்பது தான்.

ஆனால் இங்கு ஒரு மாமியார், கோமாவில் இருந்த தன் மருமகளை ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... 17 வருடங்கள் கவனித்து, இன்று அவரை நடமாட வைத்துள்ளார்!

இன்றைய காலகட்டத்தில் குடும்ப உறவுகளில் விரிசல்களையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதையும் அடிக்கடி காண்கிறோம். அதிலும் குறிப்பாக, மாமியார்-மருமகள் தினமும் போடும் சண்டை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போவது, மருமகளைப் பற்றிப் பக்கத்து வீடுகளில் புகார் சொல்வது, அதேபோல் மருமகளும் மாமியாரைப் பற்றித் தன் பிறந்த வீட்டில் குற்றம் சொல்வது, கல்யாணமான ஓரிரு மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போவது எனப் பல சம்பவங்களைப் பார்க்கிறோம்.

இன்னும் ஒரு படி மேலே போய், மாமியாரை கொல்வதற்கு கூலிப்படையை ஏவுவது, அதேபோல மாமியாரும் மருமகளை கொல்ல சதி செய்வது, மகனிடம் சொல்லி விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணுவது போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகளாகிவிட்டன.

ஆனால் இங்கு ஒரு மாமியார், தன் மருமகளைத் தன் சொந்த மகளை போல் பார்த்து மருத்துவ உதவி செய்து மீட்டெடுத்த விஷயம் உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.

"தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை" என்பது பழமொழி. ஆனால், சில உறவுகள் ரத்த உறவுக்கும் அப்பால் தியாகத்தின் மூலம் உன்னதமானதாக மாறுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாகச் சமீபத்தில் சீனாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பதினேழு ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்த மருமகளை, ஒரு மாமியார் தன் சொந்த மகளாகப் பாவித்து மீட்டெடுத்த அசாத்திய நிகழ்வு மனிதநேயத்தின் உச்சமாகும்.

A woman in China has touched hearts
A woman in China has touched heartssource:Scmp.com

சம்பவத்தின் பின்னணி:

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சுவான் ஃபெங்யிங் (68). இவரது மகன் சூவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்து சரியாக ஒரு மாதமே ஆகியிருந்த நிலையில், ஒரு பயங்கரமான லாரி விபத்தில் சிக்கிய சூ, பலத்த மூளைக் காயமடைந்தார். மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் 'வெஜிடேட்டிவ் ஸ்டேட்' (Vegetative State) எனப்படும் முழுமையான சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார்.

பலரும் கைவிட்ட அந்தச் சூழலில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்கொண்ட சோகம் அளவிட முடியாதது.

மாமியாரின் உன்னதத் தியாகம்:

மருத்துவர்கள் கைவிட்ட போதிலும், மாமியார் சுவான் மனம் தளரவில்லை. தன் மகனின் வாழ்க்கையை நினைத்துக் கலங்குவதை விட, மருமகளின் உயிரைக் காப்பாற்றுவதையே தன் வாழ்நாளின் லட்சியமாக கொண்டார்.

நாள்தோறும் அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானவை அல்ல:

  • திரவ உணவுகளை ஒவ்வொரு ஸ்பூனாக ஊட்டிவிட தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவிட்டார்.

  • படுக்கைப் புண்கள் வராமல் தடுக்க தினமும் 10 முறைக்கும் மேல் உடலைத் திருப்பிப் போட்டார்.

  • தசைகள் சுருங்காமல் இருக்கத் தொடர்ந்து பிசியோதெரபி மற்றும் மசாஜ் செய்து வந்தார்.

  • கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சொந்த உழைப்பைக் கொண்டு மருமகளைப் பாதுகாத்தார்.

சோர்வு எட்டிப் பார்க்கும்போதெல்லாம், "அவள் என் குடும்பத்தின் மகள்" என்ற ஒற்றை வார்த்தை அவருக்குப் புதிய பலத்தைக் கொடுத்தது.

விடாமுயற்சியும் அன்பும் எந்த இமாலய மலையையும் நகர்த்தும் என்பதற்கு ஏற்ப, 17 ஆண்டுகள் கழித்து அந்த மருத்துவ அற்புதம் நிகழ்ந்தது. சுவானின் அன்பும் அர்ப்பணிப்பும் சூவின் நரம்புகளில் மீண்டும் உயிரோட்டத்தைக் கொண்டுவந்தன. ஒரு நாள் காலை, இமைகளைத் திறந்த சூ பேச முயன்றார். தன் மாமியாரைப் பார்த்து அவர் கூறிய "அம்மா, நல்லவர்!" என்ற வார்த்தை இணையம் முழுவதும் வைரலானது.

இன்று சூ தன் சொந்த வேலைகளைச் செய்வதோடு, சமையல் செய்யும் அளவுக்குத் தேறி வருகிறார்.

முடிவுரை:

இன்றைய காலகட்டத்தில் குடும்ப உறவுகளில் விரிசல்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதையும் அடிக்கடி காண்கிறோம்.

ஆனால், சுவான் ஃபெங்யிங் - சூ ஜோடி மனிதகுல மீது கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்துள்ளது. உண்மையான அன்புக்கு வயது, காலம், உறவுமுறை போன்ற எந்த வரையறைகளும் கிடையாது என்பதையும், அர்ப்பணிப்புடன் கூடிய பாசம் மரணத்தையே கூட தோற்கடிக்க வல்லது என்பதையும் இச்சம்பவம் உலகிற்கு சத்தமாக சொல்லி செல்கிறது.

இதையும் படியுங்கள்:
கூட்டுக் குடும்பம் போச்சு... சொந்த பந்தமும் தொலைஞ்சு போச்சா? இன்றைய உறவுகளின் உண்மை நிலை!
A woman in China has touched hearts