இனி பிறப்பு முதல் 18 வயது வரை ஒரே தளத்தில் சிகிச்சை விவரம்: 'நலம் 2.0' புதிய திட்டம்..!

குழந்தை பிறப்பு முதல் 18 வயது வரை அனைத்து சிகிச்சை விவரங்களையும் ஒரே தளத்தில் கண்காணிக்க நலம் 2.0 திட்டம் வருகிறது.
குழந்தை பிறப்பு |நலம் 2.0
குழந்தை பிறப்பு |நலம் 2.0
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு, மேற்கொள்ளப்படும் சிகிச்சை உள்பட அனைத்து மருத்துவ விவரங்களையம் பதிவு செய்து கண்காணிக்க 'நலம் 2.0' (Nalam 2.0) திட்டத்திற்கான இணையதளம் மற்றும் கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் (NHM-TN) டெண்டர் கோரியுள்ளது.

தமிழக அரசு ‘நலம்’ (Nalam) என்ற பெயரில் பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் 'நலம்' இணையதளத்தில், பரிந்துரைக்கப்பட்ட (referred) ஒரு குழந்தைக்கு, சிகிச்சை முடியும் வரை அதைக் கண்காணிக்கும் வசதி இல்லை. எனவே, 0 முதல் 18 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை (master identification) உருவாக்கி, சிகிச்சை முடியும் வரை அவர்களைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ‘நலன் டி.என்’ என்ற திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவ உதவிகளை வழங்கவும் சிஎஸ்ஆர் நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நன்கொடைகளை வெளிப்படைத்தன்மையுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கான பிரத்யேக இணைதளமும் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் 18 வயது வரை மேற்கொள்ளப்படும் பல்வேறு சுகாதார சேவைகளுக்கு தனித்தனி கோப்புகள் வழங்கப்பட்டு அவை பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

எனவே குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் 18 வயதை அடையும் வரை மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட விவரங்களை ஒரே தளத்தில் பதிவு செய்து கண்காணிக்க ஏதுவாக ‘நலம் 2.0’ திட்டத்தின் கீழ் புதிய ஒருங்கிணைந்த இணையதளம் (Single Health Record) உருவாக்கப்பட உள்ளது. இதற்காக தேசிய சுகாதார இயக்கம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

'நலம் 2.0' இணையதளமானது, பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளுக்கு இடையே தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் செயல்படும்.

tamil nadu government
tamil nadu government

இந்த இணையதளத்தில் குழந்தைக்கு ஏற்படும் நோய்கள், பரிசோதனை முடிவுகள் (நோய் கண்டறிதல்), அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் சேமிக்கப்படும். மேலும குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்கள், அங்கன்வாடியில் வழங்கப்படும் சேவைகள், குழந்தைகளின் சுகாதார தகவல்கள், பள்ளி பருவ மருத்துவ சிகிச்சைகள், நோய்களுக்கான சிகிச்சை விவரங்கள் ஆகியவை ஒரே தளத்தில் பதிவு செய்து கண்காணிக்க முடியும்.

சுகாதாரத் தரவுப் பதிவைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலி (App) மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நலம் AI: அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?
குழந்தை பிறப்பு |நலம் 2.0

பிறப்பு முதல் 18 வயது நிறைவடையும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான அடையாள எண் (Master Identification) வழங்கப்பட்டு, நோய் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை விவரங்கள் ஒரே பதிவில் பராமரிக்கப்படும்.

சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குழந்தை மருத்துவப் பரிசோதனை அல்லது தொடர் சிகிச்சைக்கு ஏழு நாட்களுக்குள் வரத் தவறினால், அதன் பெற்றோர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் வசதியும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

நலம் 1.0-இல் உள்ள ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யக்ரம் (RBSK), மாவட்ட ஆரம்பக்கட்ட தலையீட்டு மையங்கள் மற்றும் கண்ணொளி காப்போம் திட்டத்துடன், 'டீன் ஹெல்த்' (teen health) மற்றும் 'அனீமியா டி3' (Anaemia T3) உள்ளிட்ட பள்ளி மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சுகாதாரத் திட்டங்களையும் இந்த இணையதளத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 15 முக்கிய வசதிகள் இடம்பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட உள்ளது. 18 வயதுக்கு பின்னர் வயது வந்தோருக்கான சுகாதார கோப்புடன் இணைக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கும் பதிவாக அவை மாற்றப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

இதேபோல் 16 வாரங்களுக்குள் இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தவும், தொடர்ந்து 12 மாதங்கள் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நலம் TN தொடக்க விழா.. மேடையிலிருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்..!
குழந்தை பிறப்பு |நலம் 2.0

டெண்டர் கோருபவர்கள் டிசம்பர் 14-ந்தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.