

தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (NCRB) அறிக்கையில் உள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 2.3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இதில், டெல்லியில் அதிகபட்ச வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் வாகனத் திருட்டு என்பது ஒரு கடுமையான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் குற்றமாக உருவெடுத்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 2.3 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே அதிகபட்சமாக, டெல்லியில் 40,139 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பீகாரில் 28,411 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 26,782 வாகனத் திருட்டுகளும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு ஆய்விலும் தலைநகர் டெல்லியில்தான் அதிக எண்ணிக்கையிலான வாகன திருட்டுகள் பதிவாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் நடந்த வாகனங்கள் திருட்டு தொடர்பான தரவுகளின்படி, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் தமிழ்நாடு 7,663 வாகன திருட்டுகளுடன் 10-வது இடத்தில் உள்ளது அதிர்ச்சி தகவலாகவே உள்ளது. இதில் கர்நாடகா (11,659) மற்றும் தெலுங்கானா (8,330) போன்ற தென்னிந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாட்டின் விகிதம் சற்றே குறைவாக உள்ளது என எண்ணி ஆறுதல் கொள்ளலாம்
கார்களை விட இருசக்கர வாகனங்கள் (பைக்குகள்) 9 மடங்கு அதிகமாக திருடப்படுவதாக குறிப்புகள் கூறுகிறது. திருடர்களின் விருப்பமான பிராண்டுகளாக கார்களில் மாருதி சுசுகி (வேகன் ஆர், ஸ்விஃப்ட்), ஹூண்டாய் (கிரெட்டா) மற்றும் நவீன SUV ரக வாகனங்களும், பைக்குகளில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா ஆகியவையும் அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனங்கள் திருட்டு குறித்து தமிழ்நாட்டில் பாதுகாப்பை மேம்படுத்தவும் திருட்டுகளை தடுக்கவும் காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் திருடப்படும் வாகனங்களில் சுமார் 20% முதல் 30% வாகனங்கள் மட்டுமே காவலரால் மீட்கப்படுகின்றன எனாறும் பெரும்பாலான வாகனங்கள் பிரிக்கப்பட்டு, உதிரிபாகங்களாக (Spare Parts) சட்டவிரோதச் சந்தைகளில் விற்கப்படுகின்றன என்ற தகவல்கள் நமக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது.
இந்தியாவில் வாகனத் திருட்டுக் குற்றங்கள் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 கீழ் கையாளப்படுகின்றன.
BNS பிரிவு 303 (முன்னர் IPC 379): சாதாரண வாகனத் திருட்டுகளுக்கு இப்பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
BNS பிரிவு 305: வணிக ரீதியான வாகனங்கள் (சரக்கு வாகனங்கள், பேருந்துகள்) அல்லது தொடர் வாகனத் திருட்டுகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க இப்பிரிவு வழிவகுக்கிறது என்று சட்டத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனம் திருடப்பட்டவுடன் உடனடி நடவடிக்கையாக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே உடனடியாக இ-எஃப்ஐஆர் (e-FIR) பதிவு செய்ய முடியும். மேலும் உடனடியாகஅருகில் உள்ள காவல் நிலையத்திலும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாகனத் திருட்டைத் தடுக்கும் பாதுகாப்பு முறைகள் மற்றும் பாதுகாப்புகள்..
ஸ்டீயரிங் லாக் (Steering Lock), கிளட்ச்-பிரேக் லாக் மற்றும் கியர் லாக் போன்ற கூடுதல் லாக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.ஜிபிஎஸ் டிராக்கர் (GPS Tracker): வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவதன் மூலம், வாகனம் திருடப்பட்டாலும் அதன் நேரடி இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க முடியும்.முறையான பார்க்கிங்கில் அதிக கவனம் வேண்டும். வாகனங்களைச் சாலைகளில் நிறுத்தாமல், சிசிடிவி (CCTV) கேமரா கண்காணிப்பு உள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் (Parking lots) நிறுத்த வேண்டும்.
நமது வாகனங்கள் பாதுகாப்பு நம்மிடமே எனினும் வாகனத்திருட்டு மூலம் ஏற்படும் எதிர்பாராத இழப்பைத் தவிர்க்க உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்குத் தாமதமின்றித் தகவல் தெரிவித்து, 'வாகனம் கிடைக்கவில்லை' என்ற காவலர் சான்றிதழைப் (Untraced Report) பெற்று இழப்பீடு கோரலாம்.