

எளிய குடும்ப பின்னணி, வறுமை, சமூகத்தின் எதிர்மறை பேச்சுக்கள் என அனைத்து வலிகளையம், தடைகளையும் தகர்த்தெறிந்து மருத்துவக் கல்லுாரி கனவை நனவாக்கியுள்ளனர் ஆர். தமிழ்செல்வன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆர். தமிழ்செல்வன் என்ற மாணவன், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, 12ஆம் வகுப்பில் 582 மதிப்பெண்கள் பெற்று, தனது இரண்டாவது முயற்சியில் நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உரிய முறையில் படித்தால் நீட் தேர்வு எளிதானதே என்பதை அவர் தனது உழைப்பின் மூலம் மெய்ப்பித்துள்ளார்.
இவர் நீட் தேர்வில் 561 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்தில் 6-வது இடத்தை பிடித்துள்ள இவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது; தந்தை ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். தமிழ்ச்செல்வம் தான் அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குச் சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததால், அதற்காகக் கடினமாகப் படித்துள்ளார். குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும், தன் விருப்பப்படி மருத்துவம் படிக்க வைக்க அனைத்து உதவிகளையும் தன் தந்தை செய்து கொடுத்ததாக அவர் கூறினார்.
நீட் தேர்வு குறித்து கூறிய தமிழ்செல்வன், நீட்' தேர்வு என்பது நாம் பயப்படும் அளவுக்குக் கடினமானது அல்ல. நீட் தேர்வு சுலபமானது தான். விருப்பப்பட்டு படித்தால் நீட் தேர்வு மிகவும் ஈஸி தான் என்று கூறினார். தற்போது ஸ்டான்லி மருத்துவனையில் சீட் கிடைத்துள்ள இவருக்கு, MBBS முடித்த பின்னர் PG படிக்க ஆசை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் இந்த மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ‘நீட்’ தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேரும் எண்ணிக்கை குறைந்தது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மட்டுமின்று நாடுமுழுவம் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு அமலுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தமிழகத்தில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.
இதனால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, இந்த இடஒதுக்கீட்டின் மூலம் 2020-21-ம் ஆண்டில் 435 பேரும், 2021-22-ம் ஆண்டில் 555 பேரும், 2022-23-ம் ஆண்டில் 584 பேரும், 2023-24-ம் ஆண்டில் 625 பேரும், 2024-25-ம் ஆண்டில் 625 பேரும், 2025-26-ம் ஆண்டில் 630-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு எளிதாக நனவாகி வருகிறது.
நீட் தேர்வு வந்த பிறகு ஒற்றை இலக்கில் நின்ற அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை, இந்த இடஒதுக்கீட்டால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முன்பு சில மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்த மருத்துவம் படிக்கும் வாய்ப்பு, இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு 600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. ஏழ்மை காரணமாக விலையுயர்ந்த பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் கல்வி இடைவெளி குறைக்கப்பட்டு சமவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் படிப்புச் செலவு மற்றும் தங்கும் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.