இனி பீரோவில் சும்மா கிடக்கும் நகைக்கு வட்டி வாங்கலாம்! மத்திய அரசின் புதிய தங்க பணமாக்கல் திட்டம்.!

மத்திய அரசு விரைவில் கொண்டுவரவிருக்கும் புதிய தங்க முதலீட்டுத் திட்டம் (Gold Monetisation Scheme) குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
தங்கம் பணமாக்கல்
Gold Monetisation SchemeAI Image
Updated on

வீடுகளில் பயன்படுத்தாமல் முடங்கி கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' (Gold Monetisation Scheme) புதுப்பிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புதிய திட்டம் குறித்து அடுத்த 2 வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடாகவும், ஆபரணமாகவும், பாரம்பரியமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது போன்ற பழக்கங்களால் தங்கம் பயன்பாடின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக (Ideal Gold) தொழில்துறை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

வர்த்தக வட்டாரங்களின் தகவல்படி, திருத்தப்பட்ட 'தங்க பணமாக்கல் திட்டம்' (Gold Monetisation Scheme) ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. வீடுகளில் சும்மா கிடக்கும் தங்கத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நோக்கில், தங்க வர்த்தகத் துறையினர் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தங்கத்தை அரசின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒப்படைத்து, அதற்கு வட்டி பெறும் திட்டமே தங்கத்தை பணமாக்கும் திட்டம். குறிப்பிட்ட காலம் முடிந்த பின், தங்கமாகவோ அல்லது அதற்குரிய பண மதிப்பாகவோ திரும்ப பெறலாம். அதாவது உங்கள் வீட்டின் பீரோவில் சும்மா இருக்கும் நகைகள் அல்லது தங்கக் கட்டிகளை இத்திட்டத்தில் ஒப்படைப்பதன் மூலம், அதற்கு அரசு வழங்கும் ஆண்டு வட்டியை நீங்கள் வருமானமாகப் பெறலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய மாற்றமாக, இதுவரை வங்கிகள் வாயிலாக மட்டுமே தங்கத்தை ஒப்படைக்க முடிந்த நிலையில், இனி நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளையும் தங்கம் சேகரிக்கும் மையங்களாக நியமிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை அருகிலுள்ள நகைக்கடைகள் வாயிலாகவே இத்திட்டத்தில் இணைய வாய்ப்பு கிடைக்கும்.

புதிய திட்டம் அமலான பின், அங்கீகாரம் பெற்ற வங்கி அல்லது நகைக்கடையில் தங்கத்தை ஒப்படைக்கலாம். தங்கத்தின் துாய்மை பரிசோதிக்கப்பட்டு அதன் எடை பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் கணக்கு தொடங்கப்பட்டு, வைப்பு காலம் முழுவதும் வட்டி வழங்கப்படும். வைப்புக்காலம் முடிவடையும் போது, ​​அதற்கு இணையான அளவுள்ள தங்கத்தையோ அல்லது அப்போதைய சந்தை விலையின் அடிப்படையில் அதற்கான பணத்தையோ திரும்பப் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.

2015-ல் தொடங்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்தது ஏன்?

கடந்த 2015-ம் ஆண்டு 1000 டன் இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், 10 ஆண்டுகளில் இதுவரை வெறும் 38 டன் தங்கம் மட்டுமே கிடைத்துள்ளதால் இந்த புதிய மாற்றம் செய்யப்படவுள்ளது.

தங்க இறக்குமதியைக் குறைத்து, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் (Current Account Deficit) கட்டுப்படுத்தும் நோக்கில் 2015-ஆம் ஆண்டு இந்தத் தங்கம் நாணயமாக்கல் திட்டம் (GMS) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் Physical Gold ஆக வாங்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். முதலீட்டாளர்கள் தங்கள் தங்கத்தை வங்கி லாக்கர்களில் டெபாசிட் செய்து, அதற்கான கால அளவைப் பொறுத்து 2.25% முதல் 2.5% வரை வட்டியும் பெற வழிவகை செய்யப்பட்டது. குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு, முதிர்வு காலத்தில் (At the time of withdrawal) தங்கமாகவோ அல்லது அதற்கு இணையான பணமாகவோ திரும்பப் பெறும் வசதி இருந்தது.

தங்கம் பணமாக்கல்
தங்கம் பணமாக்கல்

ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, மார்ச் 2025 நிலவரப்படி, வெறும் 38 டன் தங்கம் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வீட்டுத் தங்க இருப்பு சுமார் 25,000 டன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த 38 டன் என்பது மிக மிகக் குறைவான அளவாகும். மேலும், இதே காலகட்டத்தில் மத்திய அரசு நடுத்தர மற்றும் நீண்ட கால டெபாசிட் திட்டங்களையும் நிறுத்தியது. அரசுக்கு ஏற்பட்ட வட்டி இழப்புகளே இந்தத் திட்டம் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தொழில்துறை அமைப்புகளின் கருத்துப்படி, இத்திட்டம் தோல்வியடைந்ததற்குப் பின்னால் சில உணர்வுப்பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்தியக் குடும்பங்கள் தங்களின் பாரம்பரிய மற்றும் உணர்வுப்பூர்வமான நகைகளை ஒரு சிறிய வட்டி லாபத்திற்காக உருக்க விரும்புவதில்லை. ஏனெனில் பழைய நகைகளில் குடும்ப நினைவுகளும், மத மதிப்புகளும், சமூக முக்கியத்துவமும் கலந்திருக்கின்றன. மேலும், வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வரித் தணிக்கை (Tax Scrutiny) மற்றும் ஆவணங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்படும் என்ற பயமும் மக்களிடம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரதமர் மோடியின் கோரிக்கையையும் மீறி எகிறிய தங்க இறக்குமதி: மே மாத அதிரடி புள்ளிவிவரம்..!
தங்கம் பணமாக்கல்

அதேபோல் தங்க டெபாசிட்டுகள் வங்கிகளுக்குப் போதிய வணிக லாபத்தை தராததால், வங்கிகளும் இத்திட்டத்தை தீவிரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியக் குடும்பங்களிடம் முடங்கிக்கிடக்கும் 25,000 டன் தங்கத்தில், குறைந்தது 5% அதாவது 1,250 டன் தங்கத்தையாவது இந்த முறை திரட்டிவிட வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் இந்திய குடும்பங்களில் உள்ள தங்கத்தில் 5 சதவீதத்தை (சுமார் 1,250 டன்) வெற்றிகரமாகத் திரட்டினால் கூட, சந்தையில் கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள (சுமார் ₹7.5 லட்சம் கோடி)உள்நாட்டுப் பணம் புழக்கத்திற்கு வந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் பலமடையும் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அதாவது இந்த திட்டத்தின் மூலம் இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் 5 சதவீதத்தை மட்டும் இந்த திட்டத்தில் சேர்ந்தாலும், 7 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டு நிதி உருவாகும். மேலும் தங்கம் இறக்குமதி குறைந்து, அன்னிய செலாவணி சேமிக்கப்படும். பயன்படுத்தப்படாத தங்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்குவது எப்படி? ஸ்மார்ட்டான முதலீட்டு வழிகள்!
தங்கம் பணமாக்கல்

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் தங்க இறக்குமதியை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பூஜ்ஜியமாக மாற்றும். இதனால் அமெரிக்க டாலருக்கான தேவை பெருமளவில் குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயரக்கூடும்.

பொதுமக்கள் தங்களின் தங்க நுகர்வை (Gold Purchases) ஓராண்டுக்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றியமைக்கப்பட்ட இந்தத் தங்கம் நாணயமாக்கல் திட்டம் (GMS) இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், முறையான தங்கப் பொருளாதாரத்தை (Formal Gold Economy) வலுப்படுத்தும் என்றும், முடங்கிக் கிடக்கும் தங்கத்தை "உற்பத்தித்திறன் மிக்க தேசிய மூலதனமாக" (Productive National Capital) மாற்றும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஷாக்.. 2 நாட்களில் ரூ.3,600 உயர்வு.. உச்சத்தை நோக்கி தங்கம் விலை..!
தங்கம் பணமாக்கல்

இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், இதற்கான வட்டி விகிதம் மற்றும் வரி விதிப்புச் சலுகைகள் குறித்த முழு விவரங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசுத் தரப்பிலிருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com