

இந்தியாவில் சொந்த வீடு வைத்திருப்பவர்களை விட வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தான் அதிகளவில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை வாடகையாக கொடுத்து விட்டு, மீதிப் பணத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்படும் மக்கள் நிறைய பேர் உள்ளனர். வாடகை அதிகமாக கொடுத்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடிகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் மாதம் 10,000 ரூபாய் வாடகைக்கு, ரூ.1 லட்சம் அட்வான்ஸ் என கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில வீட்டு உரிமையாளர் வாடகைத்தாரரிடன் உறவினர்கள் வரக்கூடாது, சத்தம் போடக்கூடாது, சுவற்றில் ஆணி அடிக்கக்கூடாது, இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று போடும் கண்டிஷன் ஏராளம்.
அதேபோல் வீட்டில் ஏதாவது ரிப்பேர் என்றால் பண்ணித் தராம அலைய விடுறது, அல்லது நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று செலவை நம்ம தலையில் கட்டுவது என்று வாடகைக்கு குடியிப்பவர்களுக்கு தான் இந்த கஷ்டம் தெரியும்.
இந்நிலையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே இருக்கும் சில பிரச்சினைகளை தீர்க்கவும், வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகள், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய வாடகை விதிகள் 2026-ன் படி, வாடகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு இடையிலான உறவை முறைப்படுத்தவும், சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கவும் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே இது தொடர்பான விதிகள் இருந்தாலும் அதில் சில மாற்றங்களையும் தற்போது மேற்கொண்டுள்ளனர். இவற்றை வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வாங்க அந்த புதிய விதிகள் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம்.
தற்போது வரை பலரும் மாத வாடகை மற்றும் அட்வான்ஸ் போன்றவற்றை வாய்மொழியாகவே பேசிக் கொள்கின்றனர். ஆனால் இனி வீடு அல்லது கடை எதுவாக இருந்தாலும் உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையே எழுத்து பூர்வமான ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.
ஒவ்வொரு வாடகை ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முத்திரை (Digitally Stamped) இடப்பட்டு, 60 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். வாடகை ஆணையத்தில் பதிவு செய்ய தவறினால் ரூ.5,000ல் இருந்து அபராதம் விதிக்கப்படும்.
வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு பெரும் சுமை இருப்பது அட்வான்ஸ் தான். சென்னையில் உள்ள பலரும் ஒரு வருட வாடகைக்கான பணத்தை அட்வான்ஸ் ஆக கேட்கின்றனர். ஆனால் இனிமேல் வீட்டின் உரிமையாளர்கள் அதிகப்படியான அட்வான்ஸ் தொகையை கேட்க முடியாது. புதிய விதிகளின்படி வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாத வாடகைத் தொகைக்கு மேல் முன்பணமாக (Security Deposit) கேட்கக் கூடாது. இதே வணிக ரீதியான பயன்பாடு என்றால், அதிகபட்சம் 6 மாத வாடகை மட்டும் கேட்க வேண்டும். இந்த விதிமுறை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குள் உரிமையாளர் நுழைய விரும்பினால், குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இனி வீட்டு உரிமையாளர்கள் அவரின் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்த முடியாது.
வீட்டு உரிமையாளர்கள் 12 மாதங்களுக்குப் பிறகுதான் வாடகையை திருத்த முடியும் என்றும், அதை அதிகரிப்பதற்கு முன் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு (மூன்று மாதங்கள்)முன்பு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வாடகைத்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல வாடகையை பெறும்போது அதற்கான ரசீதையும் வீட்டில் வசிப்பவர்களுக்கு உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும். வங்கிகளில் செலுத்தினாலோ அல்லது நேரடியாக பணமாக கொடுத்தாலோ, எப்படி இருந்தாலும் ரசீது கட்டாயம்.
இனிமேல் வீட்டின் உரிமையாளர் சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டித்து வாடகைதாரர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டைக் காலி செய்ய வைக்க முடியாது. வாடகைதாரரின் அனுமதியின்றி அல்லது சட்டப்பூர்வ உத்தரவின்றி வீட்டைப் பூட்டுவது, வாடகைதாரரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது போன்ற தவறுகளை செய்யக்கூடாது. ஒரு வேளை இதுபோன்ற அத்துமீறலில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டால், வாடகைதாரர்கள் இது குறித்து வாடகை ஆணையத்திடம் அல்லது தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம். அதேசமயம், குடியிருப்பவர்கள் தொடர்ந்து வாடகை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்தால், உரிமையாளர்களுக்கு வீட்டை காலி செய்ய சொல்ல உரிமை உள்ளது.
மேலும் ஒப்பந்த காலம் முடிந்து வீட்டை காலி செய்யவில்லை என்றால் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவர்களிடம் இரட்டிப்பாக வாடகையை வசூலிக்கலாம். அதற்கு ஏற்றவாறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாடகைக்கு குடியேறுவதற்கு முன்பு வீட்டின் உரிமையாளர் வீட்டின் பராமரிப்பு பணிகளுக்கான செலவுகள் குறித்தும் அக்ரிமெண்டில் எழுதப்பட வேண்டும். பெரிய அளவிலான பழுதுகள் போன்றவற்றை வீட்டின் உரிமையாளர்கள் தான் செய்ய வேண்டும். அதே சமயம் குழாய்கள் மாற்றுவது போன்ற சிறு சிறு வேலைகளை வாடகைதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். வீட்டின் தண்ணீர் குழாய் உடைப்பு, மின்சார கோளாறு போன்ற அத்தியாவசியப் பழுதுகளை 30 நாட்களுக்குள் உரிமையாளர் சரி செய்யவில்லை எனில், வாடகைதாரரே அதைச் செய்துவிட்டு அந்தச் செலவை வாடகையில் கழித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முறையான ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்.
வாடகை செலுத்தாதது, சொத்து சேதம் அல்லது ஒப்பந்த மீறல் தொடர்பான வாடகை தகராறுகள் வாடகை நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களால் 60 நாட்களுக்குள் விரைவாகக் கண்காணிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.
இந்த புதிய விதிகள் வீட்டு உரிமையாளர், வாடைத்தாரர் என இரு தரப்புக்கும் இடையில் தேவையற்ற சட்டப் போராட்டங்களை குறைத்து, நிம்மதியான வாடகை வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.