

இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வரும் நிலையில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து விட்டுச் செல்லலாம்.
இந்நிலையில் கேமரா இல்லாத சாதாரண செல்போன்களை எடுத்துச் செல்லத் தடை இல்லை என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்
திருத்தணி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட 52 கோயில்களில் கேமரா கொண்ட செல்போனை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பக்தர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கேமரா இல்லாத சாதாரண பட்டன் ஃபோன்களை கோயிலுக்குள் எடுத்து செல்ல எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பானது சாமானிய மக்களுக்கு ஏற்டும் இடையூறுகளைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "பேரன்பிற்குரிய பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று (01-09-2026) முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது திருக்கோயில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.
அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம்.
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
சாதாரண போன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், கேமரா போன்களை பாதுகாப்பு அறையில் வைப்பதற்கான கட்டணத்தை நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலணிகளை பாதுகாக்க இலவச டோக்கன் வழங்கப்படுவது போலவே, செல்போன்களுக்கும் வழங்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோயிலில் மொபைல் மற்றும் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ்நாட்டிலும் இலவசமாக மொபைல்போன் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.