

கடன் வாங்குவது என்பது நம் சமூகத்தில் ஊறிப்போன ஒரு விஷயமாக உள்ளது. அப்படி கடன் வாங்கும்போது அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றுவேன் என சொல்லும் நபர்களால் சில நேரங்களில் மாதத்தவணை அல்லது கடனை குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப செலுத்த முடியாமல் போகும் சம்பவங்களும் நடப்பதுண்டு. இதனால் சில நேரங்களில் கடன் பெற்ற நபர்கள் மீது தாக்குதல், வீட்டு பொருட்களை சூறையாடுதல், வாகனங்களை தூக்குவது, வீட்டிற்கு பூட்டுப் போடுவது போன்ற மோசமான செயல்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது பணம் கொடுக்கும் நபர்கள் ஈடுபடுகின்றனர். சிலசமயம் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு செல்லும் சூழலும் உருவாகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, கடன் தொகையை வசூலிக்கும்போது, கடன் வழங்குபவர்கள் மற்றும் வசூல் முகவர்களின் (Recovery Agents) நடத்தை குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், கடன் வசூல் முகவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அளவுக்கு அதிகமான முறை போனில் அழைத்தல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளைக் கையாள்வதைத் தடைசெய்யும் புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்கும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் கடன் வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த விதிகள் வந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய கடன் வசூல் விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முக்கிய விதிகள் மற்றும் உரிமைகள் (புதிய விதிகள்) :
* கடன் வசூலிக்கும் பெயரில் மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அல்லது மிரட்டல் விடுவது அல்லது அச்சுறுத்துவது அல்லது வன்முறையில் ஈடுபடுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
* கடனை வசூலிக்க நியாயமான முறைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர, வாடிக்கையாளர்களின் தன்மானம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது.
* கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகளின் போது, அச்சுறுத்தல், அநாகரிகமாக அல்லது மிரட்டும் வகையில் பேசக்கூடாது.
* கடன் வசூல் முகவர்கள், கடன் வாங்கியவர்களையோ அல்லது அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் வேலை செய்பவர்களைத் தொடர்பு கொண்டு அவதூறாகப் பேசுவதோ தொல்லை தருவதோ கூடாது, பொதுவெளியில் அவமானப்படுத்தவோ கூடாது.
* திருமணம், மருத்துவ அவசர நிலை, பண்டிகைகள் அல்லது துக்க நிகழ்வுகள் போன்ற உணர்வுப்பூர்வமான காலக்கட்டங்களில் வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.
* கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் திருப்பி வசூலிக்கும் ஏஜென்ட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும். தேவையின்றி அதிகாலை அல்லது இரவு நேரங்களில் அழைத்துத் தொந்தரவு செய்யக் கூடாது. ஒருவேளை கடன் வாங்கியவர் குறிப்பிட்ட நேரத்தை கூறியிருந்தால் அந்த நேரத்தில் தொடர்பு கெள்ளலாம்.
* மீட்பு முகவர்கள் தங்களுக்கான முறையான அடையாள அட்டை, நோட்டீஸ் மற்றும் வங்கியின் அனுமதி கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.
* கடன் வாங்கி ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் வாங்கிய பிறகு அந்த நபர் தவணை கட்ட தவறினால் அதனை உடனடியாக முடக்க கூடாது. தவணை தொகையை செலுத்த தவறி 60 நாட்கள் கடந்தால் தான் அதனை முடக்க வேண்டும். அதுவும் கடன் வாங்கி வாங்கிய ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே பொருந்தும். அந்த நபரின் பிற கேஜெட்டுகளுக்கு பொருந்தாது. மேலும் கடன் தொகையை செலுத்திவிட்டால் அடுத்த ஒரு மணிநேரத்தில் அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன்பிறகு தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கடன் வாங்கியவர் ரூ. 250 இழப்பீடு பெற உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது.
* புகைப்படங்கள் , வீடியோக்கள், மொபைல் எண்கள், எஸ்எம்எஸ், அழைப்பு விவரங்கள் மற்றும் லொகேஷன் உள்ளிட்டவற்றை அணுகுவதற்கும் தடை விதித்துள்ளது. கடன் திருப்பி செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் முடக்கம் நீக்கப்பட வேண்டும்.
கடன் திருப்பி செலுத்தப்பட்ட பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்குள் சாதனத்தை முடக்கத்தை நீக்கத் தவறினால், ஒவ்வொரு மணி நேர தாமதத்திற்கும் ரூ.250 இழப்பீடாக அந்த சாதனங்களின் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். கடன் வழங்கும் ஒப்பந்தத்திலும், சாதனங்கள் முடக்கம் குறித்து குறிப்பிடப்பட வேண்டும்.
* கடன் வாங்கியவர்களை, அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தான் , கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் சந்திக்க வேண்டும். ஒரு வேளை, கடன் வாங்கியவர் எந்த இடத்தையும் குறிப்பிடாவிட்டாலும், அல்லது அவர் குறிப்பிட்ட இடத்திற்கு வராமல் ஏமாற்றினால் மட்டுமே அவரின் வீடு அல்லது பணிபுரியும் இடங்களுக்கு கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் நேரில் செல்லலாம்.
* கடன் வாங்கியவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவரது தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் கடன் விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்களும் சமூக ஊடகங்களில் பகிர ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
* கடனை திரும்பப் பெறுவதற்கான தொலைபேசி அழைப்புகள், மொபைல் எண், அழைத்த நேரம் உள்ளிட்டவற்றை வங்கிகள் குறைந்தது ஆறு மாதங்கள் சேமித்து வைத்து இருக்க வேண்டும்.
* கடனை திருப்பி பெறுவதற்காக, கடன் வாங்குபவர்களின் முக்கியமான மற்றும் தேவையான தகவல்களை தவறாக பயன்படுத்த கூடாது.
* கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு முறையான பயிற்சி வழங்கி விதிகளை சொல்லி கொடுக்க வேண்டும். பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்க வேண்டும்.
* கடனாளிகளை திரும்பத் திரும்ப தொடர்பு கொள்ளவோ, பொது வெளியில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவதற்கோ மற்றும் சொத்துகள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு அனுமதியில்லை.
* விதிகளை மீறி வங்கி ஊழியர்களோ அல்லது முகவர்களோ துன்புறுத்தினால், வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடமோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கிப் புகாரளிப்பு இணையதளம் (RBI CMS) மூலமாகவோ புகாரளிக்கலாம்.