

ஐசிசி நடத்தும் 2026 உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 8-ம்தேதி தொடங்கியது. இந்த டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரின், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியது. மேலும் மைதானத்திற்குள் யாராவது விசில் கொண்டுவருகிறார்களா என்பதைக் கண்காணிக்க ஆங்காங்கே காவலர்களும் நியமிக்கப்பட்டதாக சமூக ஊடங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையை ஐசிசி அல்லது பிசிசிஐ விதிக்கவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.
இதனிடையே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால் தான் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தமிழக அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. மேலும் விஐய்யை முடக்க அரசு விசிலுக்கு தடை விதிக்கப்பட்டதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
சேப்பாக்கம் மைதானம் என்றாலே ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து தான் வழக்கம். இந்நிலையில், சேப்பாக்கத்தில் முதல்முறையாக விசில் தடைசெய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் ‛விசில்போடு' என்ற வாசகத்தை பயன்படுத்துவதோடு, விசிலை மையப்படுத்தி தான் அந்த பாடலே உருவானது. அதனால் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் நடக்கும்போதெல்லாம் ரசிகர்களின் விசில் சத்தம் மைதானத்தையே தெறிக்க விடும்.
இதற்கிடையே வரும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளது. அப்போது ரசிகர்கள் மைதானத்திற்கு விசில் எடுத்து செல்ல இதே கட்டுப்பாடு இருக்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்ததுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியின் தாரக மந்திரமான ‘விசில் போடு’ என்பதற்கு அனுமதி இல்லையெனில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் செல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.