

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் தனித்துவமான 8 இலக்க அடையாள எண் தான் EMIS எண் (Educational Management Information System Number).
பள்ளியில் ஒரு மாணவரை சேர்க்கும் போது, EMIS எண் உருவாக்கப்பட்டு, அவர் பள்ளி படிப்பை முடிக்கும் வரை இந்த எண் செயலில் இருக்கும். மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் விவரங்கள், படிக்கும் வகுப்பு மற்றும் வருகைப் பதிவு போன்ற அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.
இந்நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கும் எமிஸ் எண்ணை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இன்று காலை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில், “அலுவலக பணியாளர்களின் விவரங்கள் அனைத்தும் எமிஸ் எண்ணில் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட வேண்டும். இனிமேல் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எமிஸ் எண் மூலமாகவே மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எமிஸ் எண்ணில் பதிவு செய்த பணியாளர்களின் விவரங்கள் மாற்றம் மற்றும் திருத்தம் செய்யப்பட வேண்டியிருந்தால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும்” பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இனி மாணவர்களைப் போன்றே பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கும் எமிஸ் எண் அத்தியாவசியமான ஒன்றாகி இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் அனைத்து பணி நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில்ல் எடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான நடவடிக்கை இது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்கனவே EMIS முறை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த முறை அலுவலக பணியாளர்களுக்கும் (Non-Teaching Staff) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலாளி உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்களின் கல்வித் தகுதி, பணி நியமன தகவல்கள் மற்றும் சேவை விவரங்கள் அனைத்தும் எமிஸ் எண் மூலமாக ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் இந்த எமிஸ் எண்ணின் மிகவும் முக்கியம்.
மாணவர்களுக்கு EMIS எண்ணின் பலன்கள்:
* மாணவர் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாறும்போது, ஏற்கனவே அவர் படித்த பள்ளியில் அவருடைய மாற்றுச் சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். புதிதாக அவர் சேரும் பள்ளியில் எமிஸ் எண்ணைக் கொண்டு அவரது மாற்றுச் சான்றிதழை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்.
* இலவச பள்ளி சீருடை, புத்தகங்கள், சைக்கிள், மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் இந்த எமிஸ் எண்ணின் மிகவும் முக்கியம்.
* இதுதவிர அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு, கல்லூரியில் கல்வி உதவித்தொகை மற்றும் TNPSC தேர்வுகளுக்கு மாணவர் அரசுப் பள்ளியில் படித்தவர் தானா என்பதை உறுதி செய்வதற்கும் இந்த எமிஸ் எண் பயன்படுகிறது.
* 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய இட மாறுதல் அளிக்க வேண்டும். இனி பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் EMIS இணையதளம் வாயிலாக நடைபெறும். நேர்முக உதவியாளர் முதல் இரவுக் காவலர் வரை செப்டம்பர் 25-ம் தேதிக்குள் EMIS இணையத்தில் பதிவு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.