

ஒரு சொத்தை வாங்கும் போது, அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம். இதற்காகவே பத்திரப்பதிவுத் துறை மூலம் வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. சொத்தின் தற்போதைய உரிமையாளர் யார்? முந்தைய உரிமையாளர் யார்? வங்கியில் சொத்து அடமானத்தில் உள்ளதா மற்றும் சொத்தின் மீதான பரிமாற்றங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் உதவுகிறது.
ஆனால் பட்டாவில் சொத்து குறித்த முந்தைய விவரங்கள் ஏதும் இருக்காது. இந்நிலையில் வில்லங்க சான்றிதழ் போலவே, பட்டா வரலாற்றை அறிந்து கொள்ள தமிழக அரசு தற்போது புதிய நடைமுறையைக் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் பட்டா யார் பெயரில் இருந்தது உட்பட, கடந்த கால பட்டா வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் சொத்திற்கு பட்டா வாங்குவது என்பதே கடினமான வேலையாக இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் எளிதாக பட்டாவை வாங்கி விட முடியும். அதோடு உட்பிரிவு இல்லாத சொத்துக்களுக்கு மட்டும் பத்திரப்பதிவு முடிந்த உடனேயே பட்டா மாறுதலும் செய்து தரப்படுகிறது.
தற்போது வரை பட்டாவில், சொத்தின் முந்தைய உரிமையாளர்கள் மற்றும் பரிமாற்றங்களை தெரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் சொத்து பற்றிய உரிமை விவரங்களை மிக எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வருவாய்த் துறையின் இந்த புதிய நடைமுறையின் காரணமாக வில்லங்க சான்றிதழைப் போலவே, இனி பட்டா வரலாற்றையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஒரு நிலத்தின் பட்டாவை முன்பு வைத்திருந்தவர்களின் பெயர்கள், எப்போது பெயர் மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் பட்டா மாற்றம் நடந்தது மற்றும் எந்த காலக்கட்டத்தில் பட்டா யாரிடம் இருந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பட்டா விவரங்களை அறிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறையானது, சோதனை அடிப்படையில் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு தாலுகாவில் மட்டும் நடைமுறைப்படுத்த வருவாய்த் துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகே தமிழ்நாடு முழுக்க பட்டா வரலாறு வசதி விரிவுபடுத்தப்படும். பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழைப் பெற பொதுமக்கள் குறிப்பிட்ட அளவில் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
சோதனை முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில், தமிழக அரசு இதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார். தற்போது 2014 ஆம் ஆண்டு வரையிலான பட்டா வரவாற்றை மட்டுமே எடுக்க முடியும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த வசதி விரிவுபடுத்தப்படும் போது, 2014-க்கு முன்னர் இருந்த பட்டா விவரங்களையும் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.