

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 5-வது நாள் (ஆகஸ்ட் 11) இன்று கூடியது. தவெக அரசின் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதத்தை இன்று திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், “அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. பெயர் மாற்றப் பட்டியல் போல் வெளியாகியுள்ளது தமிழக பட்ஜெட்.
திருப்புகின்ற பக்கமெல்லாம் முந்தைய திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய தவெக அரசின் திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் தேடுகிறேன்... தேடுகிறேன்... தேடிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்கான திட்டங்கள் இருக்கிறதா என்று தேடினேன். ஆனால் ஆளும் தவெக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.
தவெக அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கிக் கொண்டிருக்கின்றன. கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். மக்களுக்குத் தேவையான முக்கிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை” என சட்டப்பேரவையில் ஓபிஎஸ் உரையாற்றினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே கார சார விவாதம் நடைபெற்றது.
ஓபிஎஸ்: என்னுடன் நீங்களும், உங்களோடு நானும் ஒன்றாக பயணித்தோம். நான் என் பாக்கெட்டில் புகைப்படத்தை வைத்திருக்கிறேன் என அமைச்சர்கள் சொல்வது முற்றிலும் தவறு.
செங்கோட்டையன்: நாங்கள் படத்தை வைத்துக் கொண்டு ஏமாற்றுவதாக நீங்கள் சொல்வது வேடிக்கையாக இல்லையா.? நீங்கள் சொல்வது கொச்சையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள் பரவாயில்லை. அதற்காக இவ்வளவே துதி பாட வேண்டிய அவசியமில்லை.
ஓபிஎஸ்: அந்த இடத்தை முதலில் மாற்றியவர் அவர் தான் என்பதை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என ஓபிஎஸ் கூறியதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “பாசத்திற்குரிய அண்ணன்(செங்கோட்டையன்) இடம் மாறிய போதும் அவரின் இதயத்திற்கு அருகில் இருக்கும் நிழல் படத்தை மாற்ற வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்.
ஆனால் அண்ணனின் (ஓபிஎஸ்) பாக்கெட்டை பார்க்கும் போது இடமும் மாறி இருக்கிறது; இதயமும் மாறி இருக்கிறது என்றே தோன்றுகிறது” எனக் கூறினார்.
ஓபிஎஸ்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மனதில் இருக்கிறார். படத்தை வைத்து ஏமாற்ற வேண்டாம்.
செங்கோட்டையன்: நீங்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இருவரும் அதிமுக கட்சியில் நீண்ட காலமாக பதவி வகித்தவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற காலத்தில் ஓபிஎஸ் முதல்வராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உட்கட்சி மோதலால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்.
தேர்தலுக்கு முன்பாக கட்சியை இணைக்க முற்பட்ட செங்கோட்டையனும் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதன்பிறகு தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், இன்று வருவாய்த் துறை அமைச்சராக இருக்கிறார். அதேபோல் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் எம்எல்ஏவாக இருக்கிறார்.
இருவரும் கட்சி மாறிய பிறகு, பாக்கெட்டில் வைத்திருந்த புகைப்படமும் மாறியது. இருப்பினும் தவெக தலைவர் விஜய், ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள செங்கோட்டையனுக்கு அனுமதி அளித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே இன்று நடந்த காரசார விவாதம், சட்டமன்றத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியது