

இந்திய அளவில் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ‘மணி மியூல்’ என்ற புதிய வகை மோசடி அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் சைபர் குற்றங்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை சாதாரண நபர்களின் வங்கி கணக்கிற்கு மோசடிகாரர்கள் மாற்றுகின்றனர். இந்த மோசடியால் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கபப்பட்ட பணம், பொதுமக்கள் கணக்கிற்கே சென்று சட்டப்பூர்வ பணமாகி விடும்.
இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். மாறாக வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விற்கும் சாதாரண மக்கள் தான் மாட்டிக் கொள்வார்கள். நாட்டில் தற்போது வரை மணி மியூல் மோசடியில் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இனி பெட்ரோல் பங்குகளில் GPay மற்றும் Phonepe உள்ளிட்ட யுபிஐ பணப் பரிமாற்றத்தை நிறுத்த பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
யுபிஐ சேவையின் வரவுக்குப் பிறகு சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து கடைகளிலும் யுபிஐ பணப் பரிமாற்றம் நடக்கிறது. யுபிஐ சேவையின் மூலம் பெரும்பாலான பொதுமக்கள் இதனை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் பலரும் யுபிஐ வழியாக பணம் செலுத்தினர். ஆனால் இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
நாட்டில் தற்போது மணி மியூல் மோசடி அதிகரித்து வரும் சூழலில், யுபிஐ மூலம் செலுத்தப்படும் பணம் மோசடிப் பணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மணி மியூல் மோசடியால் இந்தியாவில் தற்போது வரை 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யுபிஐ சேவையை நிறுத்த பெட்ரோல் வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடந்தால், யுபிஐ பரிவர்த்தனை மீதான நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். மணி மியூல் மோசடிக்கு விரைந்து தீர்வு காண்பதே இதற்கான ஒரே வாய்ப்பு.
இனி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போடச் செல்லும் வாடிக்கையாளர்கள், ரொக்கப் பணத்தை கையில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் யுபிஐ பரிவர்த்தனையை நிறுத்துவதற்கான அறிவிப்பை பெட்ரோலிய வணிகர் சங்கம் வெளியிடும். திடீரென இந்த சிக்கலில் வாடிக்கையாளர்கள் மாட்டிக் கெள்ளாமல் இருக்க, எப்போதுமே ரொக்கப் பணத்தை வைத்திருப்பது நல்லது.
விழிப்புணர்வு:
மணி மியூல் மோசடியில் பொதுமக்கள் யாரும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, உங்கள் வங்கிக் கணக்கை யாருடனும் பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகாரை அளிக்க 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம், பகுதி நேர வேலை, கமிஷன் கிடைக்கும் எனக் கூறி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டால், தரக் கூடாது. ஒருவேளை நீங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்தால், சைபர் மோசடியில் முதல் குற்றவாளியாக நீங்கள் தான் இருப்பீர்கள். ஆகையால் கவனமுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.