பாதுகாப்பற்றதா ‘Bisleri’ குடிநீர்? ஆய்வக முடிவும், நிறுவன விளக்கமும்... எது உண்மை?

பிஸ்லெரி நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட குடிநீர் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர FSSAI அனுமதியளித்துள்ளது.
Bisleri|பாட்டில் குடிநீர்
Bisleri|பாட்டில் குடிநீர்image credit-businesstoday.in

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

பிஸ்லெரி (Bisleri) நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பற்றது" எனக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது.

சமீபத்தில் சுகாதாரமற்ற, காலாவதியான அல்லது பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்யும் உணவு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி ஆகும்.

பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (Bisleri International Pvt. Ltd.) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான நிறுவனமாகும். இந்தியாவில் "பாட்டில் குடிநீர்" என்பதற்கு மறுபெயராகவே 'பிஸ்லெரி' மாறியுள்ளது. இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டில் குடிநீர் சந்தையில் பிஸ்லெரி முன்னணி வகிக்கிறது. நாடு முழுவதும் பிஸ்லேரி நிறுவனம் 143 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.

இந்நிலையில் பிஸ்லெரி நிறுவன வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட குடிநீர் மாதிரி (மினரல் வாட்டர் தவிர), ஆய்வகப் பரிசோதனையில் அருந்துவதற்கு "பாதுகாப்பற்றது" எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட குடிநீர் மாதிரியில் (மினரல் வாட்டர் தவிர) குடிநீரை சுத்திகரிக்கும்போது உருவாகும் புரோமேட் (Bromate) எனப்படும் வேதிப்பொருள் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு அளவை விட அதிக அளவு இருந்ததால் பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டது.

இதையடுத்து பிஸ்லெரி நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அந்த மாதிரி மீண்டும் உயர் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும் அந்த நீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த மாதிரி மீண்டும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

ஆய்வக பரிசோதனை முடிவுகளின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் கீழ் பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தல் தொடர்பான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் என தெரிவித்துள்ளது.

புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் ஆகிய இரண்டு வேதிப்பொருள்களும் அதிகயளவில் உடலுக்குள் சென்றால் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) என தெரிவித்துள்ளது.

FSSAI|உணவுப் பாதுகாப்பு
FSSAI|உணவுப் பாதுகாப்புimage credit-ndtv.com

இதையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் கீழ் இந்த மாதிரி பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர FSSAI நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வழக்குத் தொடருவதற்கு அனுமதி அளித்திருந்தாலும், பிஸ்லெரி நிறுவன தயாரிப்புகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே சுகாதாரமற்ற, காலாவதியான மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக FSSAI நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது பிஸ்லேரி நிறுவனத்தின் மீதும் வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஸ்லெரி நிறுவனம் சார்பில் விளக்கமளித்து குடிநீர் பாதுகாப்பானது என விளக்கமளித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2025 செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள பிஸ்லேரி உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதி குடிநீர் தொடர்பானது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பலகாரங்கள் பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா? FSSAI கூறுவது என்ன?
Bisleri|பாட்டில் குடிநீர்

கடந்த 2025 செப்டம்பர் 30ஆம் தேதி, கோவா ஆலையில் இருந்து FSSAI அதிகாரிகள் ஆறு குடிநீர் மாதிரிகளைச் சோதனை செய்ததில் 5 மாதிரிகள் தரநிலைக்குள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு மாதிரியில் ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் புரோமேட் (Bromate) இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராம் மட்டுமே.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குடிநீர் மாதிரி மறுபரிசோதனைக்காக பரிந்துரை ஆய்வகத்துக்கு (Referral Laboratory) அனுப்பப்பட்ட நிலையில், அதில் புரோமேட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது தெரியவந்தது.

அதேநேரத்தில், அந்த மாதிரியில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதாக ஆய்வகம் தனியாகக் குறிப்பிட்டதையடுத்து, FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்தில் சோதனை செய்ததில் புரோமேட்டின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மிளகாய்த்தூளில் செங்கல் தூளா? 2 நிமிடத்தில் கண்டுபிடிக்க FSSAI சொல்லும் டெஸ்ட்!
Bisleri|பாட்டில் குடிநீர்

இந்த ஆய்வு முடிவுகளை, 2026 பிப்ரவரி 2-ம்தேதி அதிகாரப்பூர்வ கடிதத்துடன் FSSAI-யின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நிறுவனம் சமர்ப்பித்த பிறகு FSSAI தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றும், இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தாங்கள் கருதியதாகவும் பிஸ்லேரி தெரிவித்துள்ளது.