

ஒரு நிலத்தை வாங்கியதற்கான ஆதாரமாக இருப்பது பத்திரம். ஆனால் நிலத்தின் மீதான நிர்வாக மற்றும் சட்டப்பூர்வ உரிமையை முன்னிறுத்த பட்டா மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது.
சட்டப்பூர்வ உரிமை, மோசடியைத் தடுத்தல், அரசு நலத் திட்டங்களில் பயன் பெறுதல் மற்றும் சொத்து விற்பனைக்கு பட்டா அவசியம் தேவை. ஒரு சொத்தை வாங்கிய பிறகோ அல்லது வாரிசுரிமையாக ஒரு நிலத்தை பெற்ற பிறகோ பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
ஒரு நிலத்தின் பட்டா பெயர் மாற்றத்தை தமிழக அரசின் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் மூலமாக மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். அவ்வகையில் பட்டா மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.
பட்டா மாற்றம் செய்வது எப்படி?
* tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் மொபைல் ஓடிபி மூலம் உள்நுழைய வேண்டும்.
* Apply என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Patta Transfer-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
* முழு சர்வே எண் அலலது உட்பிரிவு பட்டா ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுங்கள்.
* நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பத்திரத்தில் உள்ள சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை உள்ளிட்டால், முந்தைய உரிமையாளர் பெயர் மற்றும் நிலத்தின் பரப்பு குறித்த விவரங்கள் திரையில் தோன்றும்.
* நிலத்தின் விவரங்களை சரிபார்த்து விட்டு, பெயர், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை உள்ளிட வேண்டும்.
இப்போது தேவைப்படும் ஆவணங்களை pdf வடிவில் பதிவேற்றி விட்டு, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தினால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்
பட்டா மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்:
1. உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் பத்திர நகல்
2. நிலம் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து நடப்பு தேதி வரையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று
3. நிலத்தின் முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்த பட்டா மற்றும் சிட்டா நகல்.
4. ஆதார் அட்டை
5. வாக்காளர் அடையாள அட்டை
6. சொத்து வரி அல்லது மின்சாரக் கட்டண ரசீது
வாரிசு உரிமை அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்தால் கூடுதலாக இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
அரசு நிர்ணயித்த கட்டணம்:
பட்டா மாற்றத்திற்கு அதன் வகையைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.
1. உட்பிரிவு இல்லாத பட்டா:
ஒரு நிலத்தில் சர்வே எண்ணில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.60 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
2. உட்பிரிவுடன் கூடிய பட்டா:
ஒரு சர்வே எண்ணில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தனியாக பட்டா பெற 60 ரூபாய் விண்ணப்பக் கட்டணத்துடன், உட்பிரிவு அளவீட்டுக் கட்டணமாக ரூ.400 முதல் ரூ.600 செலுத்த வேண்டும்.
பட்டா மாற எத்தனை நாட்கள் ஆகும்?
பட்டா மாற்ற விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட உடன் முதலில் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து ஒப்பதல் அளிப்பார். அதன்பிறகு வருவாய் ஆய்வாளர், நில அளவையர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் சரிபார்ப்பிற்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்.
* உட்பிரிவு இல்லாத நிலத்திற்கு பட்டா மாற்றம் பெற 15 முதல் 20 வேலை நாட்கள் வரை ஆகும்.
* உட்பிரிவு தேவைப்படும் நிலத்திற்கு அளவீடு மற்றும் நான்கு மூலைகளில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியம். ஆகையால் இவ்வகை பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 30 முதல் 45 நாட்கள் வரை ஆகும்.
பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பத்த பிறகு, விண்ணப்ப நிலையை eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் Application ID-ஐ வாயிலாக கண்காணிக்கலாம். பட்டா மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் டிஜிட்டல் கையொப்பம் இட்ட புதிய பட்டாவை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.