

ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் (இன்று முதல் )நாடு முழுவதும் பல முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அந்த வகையில் இந்த மாதம் எரிவாயு விலை, ஓய்வூதியதாரர் திட்டம், பான்-ஆதார் இணைப்பு, மற்றும் ஆதார் அப்டேட் விதிகள் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ள நிலையில் அதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.
சிலிண்டர் விலை :
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ்சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். அந்த வகையில் சென்னையில் தற்போது மானியம் இல்லாதவீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.868.50க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,750.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 1-ம்தேதி (இன்று) சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
பான்-ஆதார் இணைப்பு
பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம்தேதிக்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இந்த காலக்கெடுவிற்குள் இணைக்காவிட்டால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும், மேலும் சம்பளக் கிரெடிட், எஸ்ஐபியில் முதலீடு, வரி செலுத்துதல் போன்ற பல நிதி நடவடிக்கைகளில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் அப்டேட் முறைகள்
டிசம்பர் மாதத்தில் ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் வரவுள்ளன. ஆதார் அட்டை புதிய வடிவில், புகைப்படம் மற்றும் QR குறியீட்டுடன் மட்டும் வரலாம் எனவும், முகவரி விவரங்கள் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆதார் அட்டை ‘புகைப்படம் + QR கோடு’ வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ் தாக்கல் விதி
ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பலர் டிஜிட்டல் ஜீவன் பிரமான் முறைக்கு (Digital Jeevan Pramaan system) மாறிவிட்டாலும், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தொடர்ந்து நேரடி சமர்ப்பிப்புகளை பெறுகின்றன.
நவம்பர் 30-க்குள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று முதல் (டிசம்பர் 1-ம்தேதி) ஓய்வூதியப் பணம் நிறுத்தப்படலாம். மேலும் சான்றிதழை தாக்கல் செய்ய தவறிய ஓய்வூதியதாரர்கள் தங்கள் விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும் வரை தாமதங்களை சந்திக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
NPS-க்கு UPS விதி :
அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையான NPS-இன் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான கடைசி தேதி நேற்றுடன் (நவம்பர் 30) முடிவடைந்தது. இந்த காலக்கெடு இதற்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான சாளரம் டிசம்பர் 1-ம்தேதிக்கு பிறகு மீண்டும் திறக்கப்படாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) அம்சங்களை NPS கட்டமைப்பிற்குள் கொண்டு வர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீண்ட ஆயுட்காலம் காரணமாக ஏற்படும் நிதிப் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்து, போதுமான மற்றும் உறுதியான ஓய்வூதிய பலன்களை வழங்குவதே இதன் நோக்கம்.
Tax-related filings:
பல நேரடி வரி இணக்கங்களும் நவம்பர் 30-ம்தேதியுடன் முடிவடைந்தன. பிரிவுகள் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S இன் கீழ் அக்டோபரில் கழிக்கப்பட்ட TDS அறிக்கைகளும் இதில் அடங்கும்.
இந்திய தொகுதி நிறுவனங்களை கொண்ட பன்னாட்டு குழுக்கள் நேற்றுடன் (நவம்பர் 30) படிவம் 3CEAA ஐ சமர்ப்பித்திருக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில்(இன்று முதல்) இருந்து தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
ரேஷன் கார்டு பயனர்களுக்கு கட்டாய ஆதார் சரிபார்ப்பு:
ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் ஆதார் மறு சரிபார்ப்பை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் கார்டு பயனர்களுக்கும் கட்டாய ஆதார் சரிபார்ப்புக்கான காலக்கெடு டிசம்பர் 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து e-KYC-ஐ முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் முழுவதும் நகல் அல்லது தகுதியற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அவைகளை அகற்றுவதற்காக இன்று முதல் (டிசம்பர் 1-ம் தேதி) தானியங்கி தணிக்கையை தொடங்கும். ஆதார் அங்கீகாரம் மூலம், முகவரி தரவு மற்றும் வீட்டு விவரங்களை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருப்பது அல்லது பல இடங்களில் சலுகைகளைப் பெறும் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும்.