பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப். 10-ல் கஜமுக சூரசம்ஹாரம், செப். 13-ல் தேரோட்டம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் வரும் 10-ம்தேதி கஜமுக சூரசம்ஹாரமும், 13-ம்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
பிள்ளையார்பட்டி விநாயகர்
பிள்ளையார்பட்டி விநாயகர்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 10-ம்தேதி கஜமுக சூரசம்ஹாரமும், 13-ம்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார் பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். முற்கால பாண்டியர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் குடைவரை திருக்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுக்கள் திருக்கோவிலில் காணப்படுகின்றன.

பிள்ளையார்பட்டி விநாயகர் 6 அடி உயரமான ஒரே பாறையில் செதுக்கப்பட்ட மிகத் தொன்மையான திருமேனி ஆகும். பொதுவாக விநாயகருக்கு நான்கு கரங்கள் இருக்கும், ஆனால் இங்குள்ள விநாயகர் இரண்டு கரங்களுடன் வலது பக்கம் தும்பிக்கை சுழித்த (வலம்புரி) கோலத்தில் காட்சியளிக்கிறார்.

உலகத்திலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் வடிவம் இவருடையது என்பது ஐதீகம். நினைத்ததை வழங்கும் கற்பக மரத்தைப்போல, பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதால் இவர் கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் யோக நிலையில் உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் ( தியானம் செய்யும்) திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாட்களில் விரதம் (உண்ணா நோன்பு) இருந்து, அதனை நிறைவு செய்யும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி வருவார்கள். ஓராண்டு சதுர்த்தி உண்ணா நோன்பு விரதத்தை இங்கு பூர்த்தி செய்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது கண் கண்ட உண்மையாகும்.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகப்பெரியது ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவேயாகும்.

பிள்ளையார்பட்டி விநாயகர்
பிள்ளையார்பட்டி விநாயகர்AI image

விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி, குடியேற்றம் செய்து, இவ்விழாவைத் தொடங்குவார்கள். அந்த வகையில் பத்து நாட்கள் இத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

10 நாள் விழாவை முன்னிட்டு தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்படி இன்று (8-ம்தேதி) இரவு கமல வாகனத்திலும், 9-ம்தேதி ரிஷப வாகனத்திலும், 11-ம்தேதி மயில் வாகனத்திலும், 12-ம்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கஜமுக சூரசம்ஹாரம் வரும் 10-ம்தேதி வியாழக்கிழமை மாலை நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்குப் படைக்கப்படும் பிரம்மாண்ட மோதகப் பிரசாதம்!
பிள்ளையார்பட்டி விநாயகர்

10 நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம்தேதி ஞாயிற்று கிழமை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பக விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் இதேபோல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலங்காரத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள்.

அதனை தொடர்ந்து 14-ந்தேதி திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து மதியம் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் அன்றைய தினம் இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான 10 விழா நிறைவடைகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பிள்ளையார்பட்டி - ‘கற்பக விநாயகர்’ என்றால் என்ன பொருள்?
பிள்ளையார்பட்டி விநாயகர்

இது தவிர கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com