

சென்னையில் பெண்களுக்காக மட்டும் உருவாகும் 'பிங்க் பார்க்', பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் புதிய முயற்சியாக கருதப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மன நிம்மதியை முன்னிலைப்படுத்தி சென்னை மாநகரில் பெண்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக உருவாக்கப்படுகின்ற பிங்க் பார்க் மூலம் பெண்கள் எந்தவித பயமும் இன்றி நடை பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
சென்னையின் முதல் பெண்களுக்கான பிரத்யேகப் 'பிங்க் பார்க்' (Pink Park) தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலம், 23வது வார்டுக்கு உட்பட்ட நடேசன் நகர் 2வது தெருவில் ரூ.1.25 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. சுமார் 18,000 சதுர அடி நிலப்பரப்பில் உருவாகும் இந்தப் பூங்காவில் பெண்களுக்கென பிரத்தியேக உடற்பயிற்சிக் கூடம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகள்(Open Gym Equipment) போன்ற வசதிகள் இருக்கும்.
பாதுகாப்பான நடைப்பயிற்சித் தடங்கள் மற்றும் ஓய்வு எடுக்க அமரும் இடங்கள் போன்றவை அமைய உள்ளன. வயதான பெண்களுக்கான ஓய்வு இடங்கள், நிழற்குடையுடன் கூடிய இருக்கை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கான அதிநவீன விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊஞ்சல்கள் அமைக்கப்படுவதுடன், மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்காக சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் குழந்தைகள் எளிதாக விளையாடக்கூடிய பிரத்தியேக ஊஞ்சல்கள், மணல் தொட்டிகள் மற்றும் பார்வைக் குறைபாடு அல்லது ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான தரைமட்ட விளையாட்டு உபகரணங்கள் போன்றவை இடம்பெற உள்ளன. இந்தத் திட்டத்திற்கான முழு நிதிச் செலவும் தாம்பரம் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த நான்கு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெண்கள் குடும்பம், வேலை, குழந்தைகள் எனப் பல பொறுப்புகளை ஏற்று வாழ்கின்றனர். தங்கள் உடல் நலத்தில் போதிய அக்கறையின்றி ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு இம்மாதிரியான பூங்காக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமையும். காரணம் பல பெண்கள் பொது பூங்காக்களில் தனியாக நடைப்பயிற்சி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். பொது பூங்காக்களில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக பாதுகாப்பு உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு பிங்க் பூங்காவில் 24 மணி நேரமும் செயல்படும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி இணைப்பு மற்றும் தீவிர காவல்துறை ரோந்து ஆகிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாநகராட்சியின் இந்தப் புதிய முயற்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக பொது பூங்காக்கள் இரவு நேரங்களில் குடிகாரர்கள் மற்றும் சமூக விரோதிகளின் தங்குமிடமாக மாறிவிடுவதால் பெண்கள் அங்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.
இம்மாதிரியான நிலையில் பிரத்யேகமான பூங்காக்கள் அமைப்பதன் மூலம் சமூக விரோதிகளின் எந்தவித தொந்தரவும் இன்றி பெண்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியும் என்று எண்ணுகின்றனர். கேலி பேச்சுகள், தேவையற்ற பார்வைகள், சீண்டல்கள் மற்றும் தொல்லைகள் இன்றி, தங்களை யாராவது கண்காணிக்கிறார்களோ என்ற எண்ணம் சிறிதுமின்றி நிம்மதியாக இருக்க முடியும்.
ஆனால் இதற்கான சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்களைப் பொதுவெளியில் இருந்து பாதுகாப்பதற்காகத் தனிமைப்படுத்துவது, பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பாதுகாப்பு என்பது தனிமைப்படுத்துதலை சார்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்துடன், வேலைக்குச் செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதில் சென்றுவரும் வகையில் இந்தப் பூங்காக்கள் அருகில் இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.
எனவே, குறிப்பிட்ட சில பூங்காக்களை மட்டும் நம்பியிருக்காமல், நகரின் அனைத்துப் பூங்காக்களையும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பான சூழலாக மாற்ற வேண்டும்.
போதிய வெளிச்சம் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) அமைப்பது போன்ற நடவடிக்கைகளே பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.