
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்று நடைபெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் அந்தநாளில் நடைபெறும்.
சரி வாங்க, இந்த காணும் பொங்கலுக்கு சென்னையில் எந்த இடங்களுக்கு சென்று என்ஜாய் பண்ணுலாம் என்று பார்க்கலாம்.
சென்னை பொறுத்தவரை மெரினா, எலியட்ஸ் கடற்கரைக்கு சென்று தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம். குடும்பத்துடன் செல்லும் போது வீட்டிலிருந்து கட்டுசோறு கட்டிக்கொண்டு பீச்சில் சுற்றி அமர்ந்து கொண்டு குழந்தைகளுடனும் உறவினர்களுடன் பேசி சிரிந்தபடி சாப்பிடுவது மனதிற்கு இனிமையாக இருக்கும். குதிரை சவாரி செய்யலாம். பீச் மண்ணில் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாட குதுகலமாக இருக்கும்.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வர வேண்டும் என்று நினைத்தால், கோவளம் இருக்கிறது. நீல கடற்கரை என அழைக்கக்கூடிய ப்ளூ பீச் கோவளம் மற்றும் முட்டுக்காடு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், அதே வேளையில் சுத்தமாகவும் இருக்கக்கூடிய இந்த பீச்சையும் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம். சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் கோவளம் அருகே அமைந்துள்ளது. மற்ற கடற்கரையை காட்டிலும் இங்கு குழந்தைகளுடன் செல்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது.
அதேபால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், வடநெம்மேலி முதலை பண்ணை, கோவளம் கடற்கரை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் இந்த பொங்கல் விடுமுறையை கழிக்க அருமையான இடங்களாகும்.
தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளையும் விளையாடி மகிழலாம். விதவிதமான உணவகங்களில் பிடித்த உணவுகளை உண்டு மக்கள் மகிழலாம். பெரிய ராட்டினங்களில் அமர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் இடங்களை ரசிக்கலாம்.
சிற்பங்களை ரசித்துக்கொண்டே கடற்கரையின் அழகை பார்க்க மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம். அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளில் பார்வையிட்டு புகைப்படம் எடுக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
கிண்டி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவும் குடும்பத்துடன் சென்று ரசிக்க அருமையான இடங்களாகும். பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணும் பொங்கலை வண்டலூரில் கொண்டாடுவது வழக்கம். பூங்காவில் விலங்குகளை பார்க்க நம் வீட்டு குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு இந்த மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழலில், பூக்கள் இடையே பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் மலர் கண்காட்சியை ரசிக்கலாம்.
செங்கல்பட்டு அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வரலாம். தற்பொழுது பறவைகள் நிறைந்து காணப்படுவதால் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்று வந்தால் மகிழ்ச்சி தரும். அதே போன்று பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரலாம்.