

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வீசா (Visa) மற்றும் ருபே (RuPay) கிரெடிட் கார்டுகளுக்கான (Credit Cards)சேவை கட்டணங்களில் முக்கிய மாற்றங்களை நவம்பர் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank-PNB) தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு சேவைக் கட்டணங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நவம்பர் மாதம் முதல் இப் புதிய கட்டண மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில் விசா மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளை (RuPay Credit Cards) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே குறிப்பாக அமலுக்கு வர இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, PNB கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் (ATM) பணம் எடுத்தல், கட்டணம் செலுத்துதல், யூடிலிட்டி கட்டணங்கள், தாமதக் கட்டணத்திற்கான அபராதம் மற்றும் ரிவார்டு புள்ளிகள் (Reward Points) உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முன்பு இலவசமாக இருந்த சில சேவைகளுக்கும் இனிமேல் கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இக்கூடுதல் கட்டணங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
* PNB கிரெடிட் கார்டு மூலம் ATM யில் பணம் எடுப்பதற்கான (Cash Advance / Withdrawal) குறைந்தபட்ச சேவை கட்டணத்தை PNB உயர்த்தியுள்ளது. இனி PNB ATM-களில் பணம் எடுக்கும்போது எடுக்கப்படும் மொத்த தொகையில் 2.5% அல்லது குறைந்தபட்சம் 400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். முன்னதாக, ரூபோ மற்றும் விசா கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, எடுக்கப்பட்ட தொகையில் 2 சதவீத அல்லது ரூ.150 மற்றும் ரூ.200 (எது அதிகமோ அது) கட்டணமாக இருந்தது.
* பிற வங்கி ஏடிஎம்கள் மற்றும் வெளிநாட்டு ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது 2.5% அல்லது குறைந்தபட்சம் 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* செக் ரிட்டர்ன் / ஆட்டோ டெபிட் (Cheque Return / Auto-debit Failure) தோல்வியடைதல் போன்ற நேரத்தில் கட்டண தொகையில் 2%, குறைந்தபட்சம் ரூ.400 வசூலிக்கப்படும்.
* கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது வட்டி இல்லா சலுகை காலம் கிடையாது. பணம் எடுக்கும் முதல் நாளில் இருந்தே வட்டி கணக்கிடப்படும்.
PNB கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதற்கான மாற்றங்கள் குறித்து பின்வருமாறு...
* 50,000 ரூபாய் வரை பயன்பாட்டு கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் ஒரு பில்லிங் சைக்கிளில் (Billing cycle) செய்யப்படும் மின்சாரம் போன்ற பயன்பாட்டு பில் (Utility bill) தொகைகள் ரூ. 50ஆயிரத்துக்கு மேல் இருந்தால், மொத்தத் தொகைக்கு 1% கட்டணம் (ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 2,000 வரை) வசூலிக்கப்படும்.
* டூப்ளிகெட் பிசிகல் ஸ்டேட்மெண்ட்டை (Duplicate Physical Statement) பொறுத்தவரையில் மூன்று மாதங்களுக்கு முந்தைய அறிக்கைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.50 கட்டணம் விதிக்கப்படும்.
* கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்த தவறினால் விதிக்கப்படும் தாமத கட்டணம் (Late Payment Fee) என்பது நிலுவை தொகையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகைக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 1,200 வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
* உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை ரூ.500 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் தாமதக் கட்டணம் (Late Payment Fee) ஏதுமில்லை. நிலுவைத் தொகை ரூ.500-க்கு குறைவாக இருந்தாலும், வட்டி மற்றும் பிற பொருந்தக்கூடிய வரிகள் (GST) வங்கி விதிகளின்படி கணக்கிடப்படலாம்.
* 501 -1000 ரூபாய் வரை இருந்தால் 500 ரூபாய் தாமத கட்டணம்.
* 1,001 முதல் 10,000 வரை இருந்தால், 750 ரூபாயும், 10,001 முதல் 50,000 வரை இருந்தால் ரூ.1,000 ரூபாயும், 50,000-க்கு மேல் இருந்தால் 1200 ரூபாயும் தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
* இதற்கு முன்பு இலவசமாக இருந்த ரிவார்டு பாயிண்ட் ரிடெம்ப்ஷனுக்கு (Reward Point Redemption) இனி ஒவ்வொரு முறை கோரிக்கைக்கும் ரூ. 99 கட்டணம் வசூலிக்கப்படும் (+ ஜிஎஸ்டி).
இவ்விதிகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதால், PNB வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் (ATM) பணம் எடுப்பதைக் குறைத்துக்கொள்வதோ அல்லது தவிர்ப்பதோ நல்லது.
மேலும், பில் தொகையைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்தித் தாமதக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். ஒருவேளை 'ஆட்டோ டெபிட்' (Auto Debit) வசதியைப் பயன்படுத்தியிருந்தால், பில் செலுத்துவதற்கான தொகைக் கணக்கில் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதும் நல்லது.