

வடபழனி - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையானது வருகிற அக்டோபர் 11-ம்தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? என்பது தொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் எழும்பூர் ரெயில் நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் என முதல் கட்ட மெட்ரோ சேவைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. வழித்தடம் பயணிகள் சேவைக்கு தயாராகியுள்ளது.
இந்த வழித்தடத்தில் ஆலப்பாக்கம் மற்றும் சாலிகிராமம் மெட்ரோ நிலையங்களின் பணிகள் முழுமையாக முடிவடையாததால், தொடக்கத்தில் அங்கு ரெயில்கள் நிற்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி - வடபழனி இடையே விரைவில் தொடங்கப்படவுள்ள ‘மஞ்சள் வழித்தடத்திற்கான’ பயணக் கட்டணங்களைச் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகரப் போக்குவரத்து அமைப்பில் புதிய மைல்கல்லாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பாதையான பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.6 கி.மீ தொலைவு வரையிலான உயர்மட்ட மெட்ரோ சேவை வரும் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி நேரில் வருகை தந்து அல்லது காணொளி வாயிலாக முறைப்படி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் (Yellow Line) விரைவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பயணக் கட்டண விவரங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் (மெட்ரோ கட்டணம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சமாக ரூ.40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.10 என்றும், அதிகபட்சக் கட்டணமாக ரூ.40 என்றும் நிர்ணயிக்கம் செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் பூந்தமல்லி பேருந்து நிலையம் (புறவழிச்சாலை) வரை 10 ரூபாயும், பூந்தமல்லி முதல் பூந்தமல்லி அரசு மருத்துவமனை வரை 20 ரூபாயும், பூந்தமல்லி முதல் கரையாஞ்சாவடி மற்றும் குமணன்சாவடி வரை 20 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பூந்தமல்லி முதல் காட்டுப்பாக்கம் வரை 20 ரூபாயும், பூந்தமல்லி முதல் அய்யப்பன் தாங்கல், தெள்ளியரகரம், போரூர் மூலைக்கடை (புறவழிச்சாலை) மற்றும் போரூர் சந்திப்பு வரை 30 ரூபாயும், பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரை 30 ரூபாயும், பூந்தமல்லி முதல் வடபழனி வரை 40 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த வழித்தடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவிலேயே சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது.
இந்த புதிய வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் மேற்கு சென்னை பகுதிகளிலிருந்து நகரத்தின் மையப்பகுதிக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலும் நேர விரயமும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.