

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு மைல்கல்லாக, பூந்தமல்லி – வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவை நாளை (அக்டோபர் 11) தொடங்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளில் (Phase 2) பயன்பாட்டிற்கு வரும் முதல் வழித்தடம் இதுவாகும். நாளை பிரதமர் மோடி பூந்தமல்லி - வடபழனி வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பின்னர் அதே ரெயிலில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் ஒன்றாக பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அவரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இதுவாகும். இத்துடன் சேர்த்து, தமிழகத்தில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த வழித்தடம் மொத்தம் 14.64 கி.மீ நீளம் கொண்டது. இதில் உள்ள 17 நிலையங்களில், நாளை முதற்கட்டமாக 11 உயரமான (Elevated) நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, காரைச்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் பைபாஸ், போரூர் ஜங்ஷன் மற்றும் வடபழனி ஆகியவை இந்த நிலையங்களாகும்.
மீதமுள்ள 6 நிலையங்கள் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டு பின்னர் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதாவது, வடபழனி – போரூர் இடையே சாலிகிராமம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய நிலையங்களில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை சில மாதங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் 900 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்ட 15 அதிநவீன ஓட்டுநர் இல்லா (Driverless) மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சுமார் ரூ.4,900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வழித்தடம், சென்னையின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் மேற்கு சென்னை மக்கள் வெறும் 30 நிமிடங்களில் வடபழனியைச் சென்றடைய முடியும். அதாவது, சாலை வழியாகப் பயணிக்க 90 நிமிடங்கள் ஆகும் இந்த தூரத்தை, இனி மெட்ரோ மூலம் வெறும் 30 நிமிடங்களில் கடந்துவிடலாம்.
தொடக்கத்தில் 15 ரெயில்கள், தலா 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. இவை தானியங்கி (Automatic Train Operation) முறையில் இயங்கும்.
பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 10 முதல் அதிகபடியாக ரூ. 40 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
• பூந்தமல்லி – வடபழனி (முழு வழித்தடம்): ரூ.40
• பூந்தமல்லி – போரூர் சந்திப்பு: ரூ.30
• போரூர் சந்திப்பு – வடபழனி: ரூ.30
• பூந்தமல்லி – காட்டுப்பாக்கம்: ரூ.20
• பூந்தமல்லி மெட்ரோ - பூந்தமல்லி பேருந்து நிலையம்: ரூ.10
மெட்ரோ நிலையங்களுக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் அனைத்து 11 மெட்ரோ நிலையங்களையும் நகரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் சிறப்பு இணைப்பு பேருந்து சேவைகளை நாளை முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நாட்களிலேயே தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் ரெயில்களை இயக்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.