

2026-ஆம் ஆண்டில் உருவாகிவரும் 'எல் நினோ' (El Niño) நிகழ்வு, கடந்த 150 முதல் 175 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் தீவிரமானதாக அமையக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த 150 முதல் 175 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வலுப்பெற்று வருவதாக அமெரிக்காவின் 'பெர்க்லி எர்த்' (Berkeley Earth) அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வாக அமையக்கூடும் என்பதைப் பல பருவநிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாக இந்த அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும் உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலைக்கு எல் நினோ மட்டுமே காரணம் அல்ல என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கமும் இணைந்ததால் 2027-ஆம் ஆண்டு இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையலாம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நிகழ்வின் உச்சகட்டத் தீவிரம், 2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வையே மிஞ்சக்கூடும்.
1850-ஆம் ஆண்டு வாக்கில் நம்பகமான கண்காணிப்புகள் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவே மிக வலிமையான எல் நினோ நிகழ்வாக மாறக்கூடும் என்று சில காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 150 முதல் 175 ஆண்டுகளில், எந்தவொரு எல் நினோவும் இவ்வளவு வேகமாகத் தீவிரமடைந்ததில்லை அல்லது அதன் வாழ்க்கைச் சுழற்சியின் ஆரம்பத்திலேயே இவ்வளவு பரந்த வெப்பக் களஞ்சியத்தைக் காட்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கணிப்புகள் உண்மையானால், 2027-ஆம் ஆண்டில் உலகம் தனது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டைக் காணும் தருவாயில் இருக்கலாம்.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கதை விட 0.8 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இதனால் உலகின் சராசரி வெப்பநிலை முந்தைய காலத்தைவிட 1.7 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் பாரிஸ் பருவநிலை ஓப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் பாதுகாப்பு இலக்கை மீறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் உலகின் மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்றும், கடலில் தேங்கியுள்ள வெப்ப ஆற்றல் வளிமண்லத்துக்கு முழுமையாக பரவும்போது அடுத்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மிகத் தீவிரமான ‘எல் நினோ’ நிகழ்வு ஏற்பட 80 சதவீத வாய்ப்புள்ளதாகவும், அதன் தாக்கம் 2027-ஆம் ஆண்டிலும் தொடரக்கூடும் என்றும் கணித்துள்ளது.
இதன் விளைவாக கடுமையான வறட்சி, அதிக வெப்ப அலை, காட்டுத்தீ, கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பவளப்பாறைகள் கடுமையான 'பவள வெளுத்தல்' (coral bleaching) பாதிப்புக்கு உள்ளாகலாம்; அதேவேளையில் காடுகளும் பெருங்கடல்களும் குறைவான அளவே கார்பன்-டை-ஆக்சைடை (CO2) உறிஞ்சக்கூடும். இது உலகளாவிய வெப்பமயமாதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரி ஆய்வின்படி, ‘சூப்பர் எல் நினோ’வால் 2032-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்திற்கு 10 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.950 லட்சம் கோடி) இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கடல் வெப்பநிலை உயர்வால் பவளப்பாறைகள் சேதமடைவதும், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு
‘எல் நினோ’ காரணமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை குறையும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி விளைச்சல் 50 சதவீதம் குறையும் என்றும் கணக்கிட்டுள்ளனர். தீவிரமான ‘எல் நினோ’ பெரும்பாலும் உலகம் முழுவதும் வானிலை அமைப்புகளை மாற்றியமைக்கிறது.
இந்த காலநிலை தாக்கம் காரணமாக கடல் மேற்பரப்பு வெப்பமடைவதால் பருவமழை பொய்த்து போகவோ அல்லது தாமதமாகவோ பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாக வாய்ப்புள்ளது.
மழை தாமதம் மற்றும் மழைப்பற்றாக்குறை காரணமாக நெல், பருப்பு உள்ளிட்ட ‘காரிப் பயிர்களின் சாகுபடி குறையக்கூடும். இதன் காரணமாக உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வறட்சி மற்றும் வறண்ட வானிலை காரணமாக நெல் போன்ற முக்கிய பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் 46 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் உள் மாவட்டங்களில் வறட்சி நிலை உருவாகலாம் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் சில கடலோர பகுதிகளில் திடீர் கனமழை, மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் எல் நினோ உச்சம் பெறும்போது, சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த கால எல் நினோ ஆண்டுகளில் (குறிப்பாக 2015 மற்றும் 2023) நிகழ்ந்ததைப் போல, திடீர் அதி தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கவும், வெள்ளப்பெருக்கு உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், இந்த வலுவான ‘எல் நினோ’ நிலை 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்க 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, தற்போது நிலவும் 'சூப்பர்' எல் நினோ (super El Nino) என்பது இனி வெறும் பிராந்திய அளவிலான கடல்சார் நிகழ்வு மட்டுமல்ல; அது மிக வேகமாக இந்த தசாப்தத்தின் மிக முக்கியமான காலநிலை நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.