

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் குறித்த முழுமையான வழிகாட்டுதல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana - PMAY) என்பது மத்திய அரசால் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமாகும். அதாவது, நாட்டின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதை எளிதாக்குவதற்காக இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு கடன் சார்ந்த மானியத் திட்டமாகும்.
இது நகர்ப்புறம் (PMAY-U / PMAY 2.0) மற்றும் கிராமப்புறம் (PMAY-G) என இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. வீடற்றவர்களுக்கும், நாட்டில் மண் வீடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கும் உறுதியான வீடுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் 2028-29 வரை நீட்டிக்கப்பட்டு, கூடுதலாக வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் (EWS) மற்றும் நடுத்தர வருமானக் குழுவினருக்கு (MIG) புதிய வீடுகளைக் கட்டுவதற்கோ அல்லது பழைய வீடுகளைப் புதுப்பிப்பதற்கோ நிதியுதவியும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியமும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள்:
* இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* பயனாளியின் குடும்பத்திற்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.
* வீடானது குடும்பத்தின் பெண் உறுப்பினர் பெயரிலோ அல்லது கூட்டுப் பெயரிலோ இருக்க வேண்டும்.
* ஒரு குடும்பத்திற்கு/சொத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த வட்டி மானியம் கிடைக்கும்.
கிராமப்புறத் திட்டம் (PMAY-Gramin) தகுதிகள்:
* கூரையில்லாதவர்கள், தற்காலிகக் குடிசைகளில் (Katcha house) வாழும் ஏழைகள்.
* ஆதரவற்றோர், துப்புரவு பணியாளர்கள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள்.
* குடும்பத்தில் அரசு வேலைகளில் இருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அல்லது இருசக்கர/நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
* கிராமப்புற வீடுகள் பெண் அல்லது தம்பதியரின் கூட்டுப் பெயரில் ஒதுக்கீடு செய்யப்படும்.
விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் சில முக்கிய ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை,
ஜியோ-டேக்கிங் (Geo-tagging) தேவை
வங்கிக் கணக்கு விவரங்கள் (பாஸ்புக்),
வருமானச் சான்றிதழ்,
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்),
வசிப்பிடச் சான்றிதழ்,
ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்.
தகுதி மற்றும் பயனாளிகள் :
EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு): ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்கள்.
LIG (குறைந்த வருமானப் பிரிவு): ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ளவர்கள்.
MIG (நடுத்தர வருமானப் பிரிவு): ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள்.
நிதி மற்றும் வட்டி மானியம் :
வீட்டுக் கடன் வரம்பு: அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் (வீட்டின் மதிப்பு ரூ.35 லட்சம் வரை, கார்பெட் பகுதி 120 சதுர மீட்டர் வரை).
வட்டி மானியம்: முதல் ரூ.8 லட்சம் கடனுக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படும்.
அதிகபட்ச மானியத் தொகை: ஒட்டுமொத்தமாக ரூ.1.80 லட்சம் வரை மானியம் (5 தவணைகளில் தலா ரூ.36,000) கிடைக்கும். சில குறிப்பிட்ட பிரிவுகளில் அரசாங்க உதவியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
PPMAY-U 2.0 திட்டத்தின் கீழ் வீட்டிற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
நகர்ப்புறப் பயனாளிகள் முதலில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmay-urban.gov.in அல்லது pmaymis.gov.in-க்குச் சென்று குடிமக்கள் மதிப்பீடு (Citizen Assessment) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' (Apply Online) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் ஆதார் எண் மற்றும் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.
இந்தச் செயல்முறை முடிந்ததும், ஒரு விண்ணப்பப் படிவம் திறக்கும்.
அதில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள், வருமானம் மற்றும் வங்கி விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறை முடிந்ததும், ஒரு விண்ணப்ப எண் வழங்கப்படும்.
அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளுக்கான நேரடி விண்ணப்பம் மற்றும் தெரிவுகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், அருகிலுள்ள ஜன சேவா கேந்திராவிற்கு (CSC) சென்று, ஒரு சிறிய கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது கிராம பஞ்சாயத்து செயலாளர், பிரதான் அல்லது உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், திட்டம் தொடர்பான ஏதேனும் சிக்கல் அல்லது தகவலுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாவட்ட அலுவலகத்திலிருந்து உதவியை நாடலாம்.