

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் தனியார் பால் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பட்டியலில் உள்ள பால், பொதுமக்களின் தினசரி டீ, காபி தேவையைப் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் இன்று பால் திடீரென விலை உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனியார் பால் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தனியார் பால் விலை 8 மாதங்களில் மூன்றாம் முறையாக உயர்வு: ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி சந்தையை கட்டுப்படுத்த வேண்டும்! தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன.
ஏழை , நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. 3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை அரை லிட்டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ.35-ல் இருந்து ரூ.37ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இது 2026-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாம் விலை உயர்வு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரையிலான 8 மாதங்களில் மட்டும் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஜூலை, செப்டம்பர் என இரு முறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ.30 கூடுதலாக ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன.
தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம் தமிழ்நாட்டின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பது தான். தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 16% மட்டுமே.
இப்போது அது 12% அளவுக்கு குறைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதனால், ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனத்தால் பால் வழங்க முடியாததாலும், தனியார் நிறுவனங்கள் 84% -88% சந்தையை தங்களிடம் வைத்திருப்பதாலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
தனியாருக்கு போட்டியாக தமிழ்நாட்டில் 50% சந்தையை கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டும் தான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டவும், தனியார் பால் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து அதன் விலையை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி.