

நாட்டில் தற்போது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னணி கட்சிகள் தங்களது கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டன.
மேலும் தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் தமிழக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் திமுகவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்திய ஆட்சியில் பங்கு விவகாரம், தற்போது புதுச்சேரியிலும் தொடர்கிறது
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவிடம் வலியுறுத்தி வந்தன. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இருப்பினும் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது.
ஆட்சியில் பங்கு இல்லை என்ற விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த திமுகவின் முடிவால், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.
இருப்பினும் டெல்லி காங்கிரஸ் தலைமை, திமுகவின் தொகுதிப் பங்கிட்டை ஏற்றுக் கொண்டுள்ளதால் காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை (மார்ச் 04) இரவு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு கையெழுத்தானது.
புதுச்சேரியில் தற்போது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமியின் பதவிக்காலம் வருகின்ற இன்னும் சில நாட்களில் முடியவிருக்கும் சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட போகிறது. புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், திமுகவுக்கு ஆட்சியில் பங்கு அளிக்க மாட்டோம் என காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சற்று முன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதுச்சேரியில் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திமுக நிர்வாகிகள் தங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று தெரிவித்து வந்த நிலையில், கிரீஷ் சோடங்கரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.