பயணிகளே கவனிங்க! 'ரெயில் ஒன்' செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி: முழு விவரம் இதோ..!!

பயணிகளிடையே ரெயில் ஒன் செயலியைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலேயே தற்போது தள்ளுபடி டிக்கெட் புக்கிங் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
RailOne App
RailOne Appimg credit - newsx.com
Updated on

ரெயில்வே துறையின் அனைத்து சேவைகளையும் (டிக்கெட் புக்கிங், நேரலை நிலை, உணவு) ஒரே இடத்தில் வழங்கும் ரெயில் ஒன் (RailOne) என்ற புதிய சூப்பர் செயலியை மத்திய அரசுஅறிமுகப்படுத்தியது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி, முன்பு தனித்தனியாக இருந்த பல செயலிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும்.

இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு, ரெயிலின் நேரலை நிலை, PNR நிலை, உணவு ஆர்டர் மற்றும் புகார் அளித்தல் போன்றவற்றை எளிதாக மேற்கொள்ளலாம்.

அதாவது IRCTC (முன்பதிவு), UTS (முன்பதிவில்லாத/நடைமேடை டிக்கெட்), முன்பதிவு, தட்கல், நடைமேடை (Platform) மற்றும் சீசன் டிக்கெட்டு மற்றும் ரெயில் புகார்கள் ஆகிய அனைத்து சேவைகளும் இந்த ஒரே ஆப்பில் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ரெயில் எங்கு வருகிறது, கோச் நிலை (Coach Position) மற்றும் தாமதம் போன்றவற்றையும் இந்த செயலி மூலம் நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
ரெயில் டிக்கெட் இருந்தால் போதும்... பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்! MTC-யின் சூப்பர் அறிவிப்பு..!
RailOne App

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் கடந்த மாதம் வரை மொத்தம் 2.57 கோடி ரெயில் பயணிகள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செயலி பயணிகளுக்கு விரைவான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்கும் முக்கிய டிஜிட்டல் மாற்றமாக 'ரெயில் ஒன்' செயலி பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த UTS செயலிக்கு பதிலாகவே இந்த ரெயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தாலும், இன்னும் நிறையப் பேருக்கு இந்த செயலி கொண்டுவரப்பட்டதே தெரியவில்லை.

எனவே பயணிகளிடையே இந்த செயலியைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலேயே தற்போது தள்ளுபடி டிக்கெட் புக்கிங் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. RailOne மொபைல் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளைப் பதிவு செய்வோருக்கு 3% தள்ளுபடியை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி ஜூலை 14 வரை அமலில் இருக்கும். R-Wallet வாயிலாகப் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்வோருக்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே 3% தள்ளுபடியை வழங்கி வருகிறது.

இந்த சலுகையின் கீழ், பயணிகள் ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம் 3 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தினமும் கல்வி, வேலைக்காக ரெயிலில் பயணம் செய்பவராகவோ அல்லது அடுத்து வரும் நாட்களில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தாலோ, இந்தச் சலுகை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே இந்த தள்ளுபடி டிக்கெட் புக்கிங் சலுகையை பெற முடியும். ரெயில் ஒன் செயலியில் உங்கள் முன்பதிவு செய்யப்படாத ரெயில் டிக்கெட்டை எடுக்கும் போது 3 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவீர்கள்.

உதாரணமாக, டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் எனில், சலுகை போக டிக்கெட்டின் விலை உங்களுக்கு 47 ரூபாயாக மட்டுமே இருக்கும். அதோடு, நீங்கள் R-Wallet மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக 3 சதவீதம் கேஷ்பேக் சலுகை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
‘சென்னை ஒன்’ செயலி அறிமுகம்: இனிமேல் ஒரே டிக்கெட்டில் பஸ், ரெயில், மெட்ரோவில் பயணிக்கலாம்...!!
RailOne App

அடிக்கடி ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த சலுகை மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால் இதுவரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து தள்ளுபடி சலுகையை பெற்றிடுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com