

தற்போது அடித்தட்டு மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் பைக் டாக்சி வந்திருக்கிறது. இந்தியாவில் பைக் டாக்சி சேவை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் பைக் டாக்சி தளங்களில் சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) ஓட்டுநர்கள் பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவில் பைக் டாக்சி சந்தையானது ஆண்டுக்கு 17.4% வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இதுநாள் வரை குறைந்தபட்சம் 4 பேர் பயணிக்கும் கார் சேவை, 3 பேர் பயணிக்கும் ஆட்டோ சேவைகள் அமலில் இருந்தன. ஒரு நபர் பயணிப்பதாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில் ஒரு நபர் பயணிக்க ஏதுவாக, அவர்களின் செலவை குறைக்கும் வகையில், சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் தனியார் நிறுவனத்தால் பைக் டாக்சி சேவை தொடங்கப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. குறைவான கட்டணம், சாலையில் நெரிசல் இருந்தால், சந்து பொந்துக்களில் எளிதில் நுழைந்து, விரைவாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடிந்ததால், பைக் டாக்சி சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமாக அதிகரித்து கொண்டே வருகிறது.
பைக் என்பதால் போக்குவரத்து நெரிசல் உட்பட சிக்கலான நேரங்களிலும் விரைந்து செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றுவிடலாம். ஒருவர் மட்டும் செல்ல ஆட்டோ, கார் எடுப்பதற்கு பதிலாக பைக் டாக்சி சிறந்த தேர்வு இருப்பதாக அனைவரும் கருதுவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் தான் Rapido பைக் ஓட்டுநர் ஒருவர், ஒரு பைக் சவாரியை மறுத்ததற்காகத் தனது கணக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கூறி, ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் தனது ஸ்கூட்டரில் அழைத்துச் செல்ல மறுத்ததற்காகத் தனது கணக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கவுகாத்தியைச் சேர்ந்த Rapido பைக் ஓட்டுநர் ஒருவரின் விவகாரம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண், தனது பயணத்துக்காக வாடகைக்கு ‘Rapido பைக் டாக்சி’யை (Rapido Bike Taxis) பதிவு செய்துள்ளார். அவரை ஏற்றி செல்வதற்காக வந்த பைக் ஓட்டுநர், அந்த பெண் குழந்தையுடன் நிற்பதை பார்த்து தனது பைக்கிள் ஏற்றி செல்ல மறுத்துள்ளார். அதாவது போக்குவரத்து விதிமுறையின்படி, மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது சாலை விதிகளை மீறும் செயல் என்பதால் அந்த முன்பதிவை மறுத்த அந்த ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டவிரோதமானது மற்றும் பாதுகாப்பற்றது என்றும் அந்த பெண்ணுக்கு விளக்கியுள்ளார்.
எனவே நீங்கள் பைக்கிற்கு பதிலாக வாடகை ஆட்டோ சேவையை பயன்படுத்துங்கள் என்று அவர் கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தகாத வார்த்தைகளைப் பேசியுள்ளார். பின்னர் இதுகுறித்து வாடகை நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து, சுமார் அரை மணி நேரத்தில் அந்த பைக் ஓட்டுநருக்கு நிறுவனத்திடம் இருந்து ஒரு தகவல் அனுப்பட்டுள்ளது.
அதில் ‘வாடகை பைக் ஓட்டும் சேவையில் இருந்து உங்கள் கணக்கு 100 ஆண்டுகள் தடை செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அதில், ஓட்டுநரின் 'Bike' மற்றும் 'Bike Boost' ஆகிய சேவைகள் 99 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடக்கம் மே 29, 2126 அன்று மதியம் 2:13 மணிக்கு முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தனது பக்க நியாயத்தையும், தனது ஆதங்கத்தையும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
அதை பிரபல சமூக வலைத்தள பக்கம் ஒன்று தங்கள் கணக்கில் பதிவு வெளியிட்டதால் அது வைரலாக பரவியது. ஓட்டுநர் இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதோடு, இதுபோன்ற புகாரில் தனது பக்க நியாயத்தையும் கேட்டுவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் அவர்கள் என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று அந்த பைக் ஓட்டுநர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு முன், சவாரி சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இரு தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டிருக்க வேண்டும்.
பைக் ஓட்டுநர் நேர்மையாக நடந்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்டு உள்ளதாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறாமல் நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை அமல்படுத்தும் அந்தத் நிறுவனத்தை விமர்சித்து, பல சமூக தள பயனர்கள் அந்த ஓட்டுநருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பயனர் ஒருவர், "எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் இருவரின் தரப்பு நியாயங்களும் கேட்கப்பட வேண்டும்," என்று எழுதினார்.
மற்றொரு பயனர், "முதலாவதாக, 99 ஆண்டுகள் 11 மாதங்களுக்கு உரிமத்தை முடக்கும் இந்தத் துரித முடிவை எடுத்தவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். 'விரைவாகத் தீர்ப்பளிப்பது எப்படி' என்பது குறித்த நீதித்துறைப் பயிலரங்கிற்கு அவர்களை அழைக்க வேண்டும்," என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், தானியங்கி அமைப்புகளால் பகுதிநேர ஓட்டுநர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.