ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் வரப்போகும் புதிய வசதி. இனி கையில் சில்லறை தேவையில்லை

ரேஷன் கடைகளில் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கடைகள் யுபிஐ
ரேஷன் கடைகள் யுபிஐAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் (ரேஷன்) கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதாவது யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை ஊக்குவிக்கும் வகையில், ஜிபே (GPay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) மற்றும் சவுண்ட் பாக்ஸ் (Sound Box) வசதியை செயல்படுத்த அமல்படுத்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ NFSA தரவுகளின்படி, தமிழகத்தில் மொத்தம் 34,919 நியாய விலைக் கடைகள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் மொத்தம் 1,17,09,090 (1 கோடியே 17 லட்சத்து 9 ஆயிரத்து 90) ரேஷன் அட்டைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த உதவிகளைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம்.

தமிழ்நாட்டில் ரேஷன் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் மலிவு விலையிலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களைத் தரமாக வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து ஏற்படும் மென்பொருள் மற்றும் விரல் ரேகை பதிவு செய்யும் பி.ஓ.எஸ் (POS) கருவிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் சர்வர் முடக்கம் காரணமாக பொதுமக்களும், ரேஷன் கடை விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க நேரிடுவதுடன், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரேஷன் கடை
Ration shop|ரேஷன் கடை

இதனால் பொதுமக்களும், ரேஷன் கடை விற்பனையாளர்கள் இடையே தினமும் கோபம், வாக்குவாதம் மற்றும் மன உளைச்சலை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் (ரேஷன்) கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு இந்த சவுண்ட் பாக்ஸ்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 10,000 கடைகளில் இக்கருவிகளைப் பொருத்தி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தியவுடன், அந்தப் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குரல் அறிவிப்பின் மூலம் சவுண்ட் பாக்ஸ் தெரிவிக்கும்.

இதையும் படியுங்கள்:
மக்களே நோட் பண்ணிக்கோங்க... இந்த நாளில் யாரும் ரேஷன் கடைக்கு போகாதீங்க...!
ரேஷன் கடைகள் யுபிஐ

இதனால் பணம் செலுத்தப்பட்டதா என்பதை கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள், ரொக்கப் பணத்திற்குப் பதிலாக கூகுள் பே, போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் வழியாகப் பணம் செலுத்தும் வசதியைப் பெற முடியும் என்பதுடன், சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற பொருட்கள் வாங்கும் போது சில்லறை வழங்குவதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் இந்த டிஜிட்டல் முறை உதவும்.

இதற்காக மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி சார்பில் 5 ஆண்டு சிம் கார்டு வாரண்டியுடன் UPI சவுண்ட் பாக்ஸ்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?தமிழக அரசு திடீர் அறிவிப்பு.!
ரேஷன் கடைகள் யுபிஐ

10,000 ரேஷன் கடைகளில் யுபிஐ சவுண்ட் பாக்ஸ்களைப் பொருத்துவதற்கான திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தின் ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேலும் விரிவடையும் என்பதுடன், பொதுமக்கள் கையில் சில்லறை பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் நேரமும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.