குட் நியூஸ்..! இனி ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகள் விற்பனை: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோதுமை மாவு
கோதுமை மாவுAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.15-க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு கோதுமை மாவு கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் என்கிற ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு சன்னரக அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், அரிசி கார்டுதாரர்கள், தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதில், கோதுமை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் கார்டுதாரர்களுக்கு மாதம் அதிகபட்சம் 10 கிலோ கோதுமையும், மற்ற பகுதிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது.

ரேஷன் பொருட்கள்
ரேஷன் பொருட்கள்image credit-dailythanthi.com

இதற்காக மத்திய அரசு மாதந்தோறும் 30 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்கிறது.

இதற்கிடையே, வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் கோதுமை மாவை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. தற்போது, நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானோர், இரவில் அரிசி சாதத்திற்கு பதில், சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகின்றனர். இதையடுத்து, ரேஷன் கடைகளிலேயே கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மத்திய அரசிடம் இருந்து கோதுமை பெறப்பட்டு, தனியார் மாவு ஆலைகள் மூலம் அரைத்து பாக்கெட்டுகளில் அடைத்து, ரேஷன் கடைகள் வழியாக விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ் : பொங்கலை போல தீபாவளிக்கும் இலவச மளிகை தொகுப்பு..!!
கோதுமை மாவு

இப்பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.15 என்ற விலையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கோதுமை மாவு, இனிமேல் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் அரிசி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி : புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு..!
கோதுமை மாவு

எனினும் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...!!

logo
Kalki Online
kalkionline.com