அக்டோபர் 1 முதல் FD விதிகளில் அதிரடி மாற்றம்: முதலீடு செய்வதற்கு முன் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க.!!

FD மற்றும் மொத்த வைப்புத்தொகைகள் (bulk deposits) தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
RBI|வைப்புத் தொகை
RBI|வைப்புத் தொகைAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யும் மக்களுக்கு நிலையான வைப்பு (fixed deposit) முக்கியமான சேமிப்பு முறையாக உள்ளது. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வட்டி வருமானத்தை எதிர்பார்க்கும் பலர் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், FD மற்றும் மொத்த வைப்புத்தொகைகள் (bulk deposits) தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் புதிய திருத்தத்தின் கீழ் இந்த 3 மாற்றங்கள் வணிக வங்கிகள் (Commercial Banks), சிறு நிதி வங்கிகள் (SFBs), பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி அமைப்புகளுக்கும் பொருந்தும்.

அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம்:

புதிய விதிகளில் முக்கியமான மாற்றமாக, ஒரே வகையான வைப்பு தொகைக்கு ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குவதை கட்டுப்படுத்தும் விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதே தொகை, அதே வகை மற்றும் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்படும் வைப்புகளுக்கு, வங்கியின் வெவ்வேறு கிளைகளிலும் ஒரே வட்டி விகிதம் பின்பற்றப்பட வேண்டும். புதிய திருத்தத்தின் கீழ், கிளைகள் மாறுவதால் வட்டி விகிதத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது.

வட்டி விகிதங்கள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்:

ஒரே நிலையான வைப்பில் ரூ.3 கோடி அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யப்பட்டால் அது 'மொத்த வைப்புத் தொகைகள்' (Bulk Deposit) என வகைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற 'மொத்த வைப்புத் தொகைகளை பொதுவாக நிறுவனங்கள், அறக்கட்டளைகள், பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் அதிக அளவு பணத்தை வங்கிகளில் நிறுத்தும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 1, முதல் அமலுக்கு வரும் ஆர்பிஐ-இன் புதிய உத்தரவுப்படி, வங்கிகள் தங்கள் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களை தினமும் காலை 10:00 மணிக்கு தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வட்டி விகிதங்களைப் புதுப்பிக்க வங்கிகளுக்கு 10 நிமிடங்கள் சலுகை நேரம் (Grace Period) வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக காலை 10:10 மணிக்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதனால் பெரிய தொகையை வங்கியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அன்றைய வட்டி விகிதத்தை அதிகாரப்பூர்வமாக பார்த்து முடிவு எடுக்க முடியும்.

மொத்த வைப்புத் தொகை மற்றும் பணப்புழக்க மேலாண்மை:

பெரிய அளவிலான மொத்த வைப்புத் தொகைகளைக் கையாள்வதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சில நெகிழ்வுத்தன்மைகளை வழங்கியுள்ளது. வங்கிகள் தங்கள் பணப்புழக்கக் கவரேஜ் விகிதம் (LCR) மற்றும் சந்தை அபாயத்தின் அடிப்படையில் வெவ்வேறு மொத்த வைப்புத் தொகைகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கலாம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் (Non-Residents) ரூபாய் வைப்புகளுக்கும் இதே போன்ற தளர்வுகள் பொருந்தும்.

bank interest rate
bank interest rateAI image

LCR கட்டமைப்பின் விதிகளுக்கு ஏற்ப என்.ஆர்.ஐ பெருந்தொகை டெபாசிட்டுகளுக்கும் வங்கிகள் மாறுபட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் உள்நாட்டு டெபாசிட்டுகள் மட்டுமின்றி, சில குறிப்பிட்ட என்.ஆர்.ஐ ரூபாய் டெபாசிட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்களுக்கு என்ன நிலை?

மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் வழங்கும் கூடுதல் வட்டி சலுகை நீக்கப்படவில்லை. தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் நடைமுறைக்கு ஏற்ப கூடுதல் வட்டி தொடர்ந்து வழங்கப்படலாம். ஆனால் அந்த வட்டி விகிதம் மற்றும் தகுதி விதிமுறைகள் வங்கியின் அதிகாரப்பூர்வ வட்டி அட்டவணையில் தெளிவாக இருக்க வேண்டும். எனவே நிலையான வைப்பு தொடங்கும் முன், பொதுவான வட்டி விகிதத்துடன் மூத்த குடிமக்களுக்கான கூடுதல் வட்டி சலுகையையும் சேர்த்து சரிபார்ப்பது அவசியம்.

பொதுமக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

முன்பெல்லாம், பெரிய அல்லது சிறப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிளை அளவில் சற்று கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி அது சாத்தியமாகாது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்: KYC லிங்க்கை கிளிக் செய்யாதீங்க... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!!
RBI|வைப்புத் தொகை

இன்று நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை காலையிலேயே வீட்டிலிருந்தபடியே வங்கியின் இணையதளத்தில் நீங்கள் சரிபார்க்கலாம். கிராமமாக இருந்தாலும் சரி அல்லது பெரிய நகரமாக இருந்தாலும் சரி வட்டி விகிதமும் ஒன்றாகவே இருக்கும்.

டெபாசிட்தாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ரூ.3 கோடிக்கும் குறைவாக நிலையான வைப்பு வைத்திருக்கும் பெரும்பாலான சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தின் நேரடி தாக்கம் குறைவாகவே இருக்கும்.

இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம் வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகும். இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் வங்கி தினசரி இணையதளத்தில் வட்டி விகிதங்களைச் சரிபார்த்து எளிதாக முதலீடு செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு வலையா? உங்கள் பணத்தை பாதுகாக்கும் கடன் மேலாண்மை வழிகாட்டி!
RBI|வைப்புத் தொகை

அக்டோபர் 1 முதல் வட்டி விவரங்கள் அனைத்தும் வங்கி இணையதளங்களில் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் முன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதற்கான வட்டி விகிதம், கால அளவு மற்றும் பிற விதிமுறைகள் ஆகியவற்றைத் தவறாமல் சரிபார்க்கவும்.

logo
Kalki Online
kalkionline.com