நள்ளிரவில் முதல்வருக்கு மெசேஜ் அனுப்பிய ரிஷப் பண்ட்: என்ன காரணம் தெரியுமா?

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உத்தரகண்ட் முதல்வருக்கு நள்ளிரவில் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்ததன் பின்னணி என்ன? முழு விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்
Rishab request to cm
Rishab Pant And pushkar Dhamix
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தன்னை நிலை நிறுத்தி உள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட், தனது பூர்விகமான உத்தரகண்ட் மாநிலத்தின் மீது அதிக பற்றுக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் தான் ஹரித்துவாரில் பிறந்த மனிதன் என்று தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இலங்கையில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இவர், அங்கு ஒரு சில சாதனைகளை புரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையில் 12.46 மணிக்கு தனது X பக்கத்தில் இருந்து, உத்தரகாண்ட் முதல்வரான புஷ்கர் சிங் தாமியை டேக் செய்து ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.

ரிஷப்பின் பதிவில் "வணக்கம் ஐயா, நலமாக இருக்கிறீர்களா? நான் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன். நீண்ட காலமாக அங்கேயே குடியேற விரும்புகிறேன். டெல்லியிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்திற்கு திரும்ப, வசதியான மற்றும் போதுமான அளவு பெரிய நிலம் ஒன்றை வாங்க முயற்சித்து வருகிறேன். ஆனால் , இதுவரை இந்த முயற்சியில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் என்னால் கண்டறிய முடியவில்லை.

எனக்கு என் மாநிலத்தின் மீது மிகுந்த பற்று உள்ளது. நான் நிலம் வாங்குவதில் எனக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், தற்போதைய சூழலில் மாநிலத்தில் நிலம் வாங்குவது தொடர்பான நடைமுறைகள் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளன. மாநிலத்தை முன்னிறுத்தி நான் பணியாற்றியபோது எனக்குக் கிடைக்க வேண்டிய நிலம்தொடர்பான விவகாரமும் இன்னும் நிலுவையில் உள்ளது.

எல்லாவற்றையும் தாண்டி, என் சொந்த ஊருக்குத் திரும்பி உத்தரகண்டின் வளர்ச்சிக்கு உதவவும், என் 'பஹாடி' (மலைப்பகுதி) மக்களுடன் இணைந்து வாழவும் நான் விரும்புகிறேன். தயவுசெய்து இந்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். கடந்த 3 ஆண்டுகளாகியும் என்னால் நிலம் வாங்க முடியவில்லை. உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் @pushkardhami ஐயா" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rishab in Harithwar
Rishab Pant X

ரிஷப்பின் வேண்டுகோளுக்கு இன்று காலை 8.48 மணிக்கு பதிலளித்த உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் தாமி, "அன்புள்ள ரிஷப், நீங்கள் உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமைக்குரியவர். உங்கள் சிறப்பான ஆட்டத்திறன் மற்றும் சாதனைகள் மூலம், இந்நாட்டிலும் உலக அளவிலும் 'தேவபூமி'யின் (உத்தரகண்டின்) புகழை நீங்கள் உயர்த்தியுள்ளீர்கள்.

உங்கள் தாய்நாட்டின் மீதான பற்றும், மாநிலத்திற்கு வந்து பங்களிப்பு செய்ய வேண்டும், என்ற உங்கள் உணர்வும் மிகவும் பாராட்டுக்குரியவை. நீங்கள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவர்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொண்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் உறுதி செய்வார்கள் , என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் , டெல்லி போன்ற நாட்டின் பிரதான பகுதியில் வசித்து வந்தாலும் , நீண்ட காலமாக தன்னுடைய மலைவாழ் நகரமான ஹரித்துவார் திரும்புவதற்கு முயற்சி செய்து வருகிறார். உத்தரகன் மாநிலத்தில் நிலம் வாங்குவது தொடர்பாக சட்டங்கள் கடுமையாக இருப்பதால், அவரது திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. வசதி வாய்ப்புகள் உள்ள மாநகரத்தை விட , அமைதியான தன்னுடைய பூர்வீக நகரத்திற்கு திரும்பி தனது மக்களுடன் வாழ வேண்டும், என்ற அவரது ஆசையை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
Interview: அருள்நிதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? - அருள்வான் இயக்குனர் கணேஷ் விநாயகன் Open Talk!
Rishab request to cm
logo
Kalki Online
kalkionline.com