

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். தை மாதம் முதல் தேதி ஐயப்பன் தரிசனம் தரும் மகர ஜோதி வரை சபரிமலையில் நடை திறந்திருக்கும்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் குளித்து விட்டு நீலிமலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வர்.
பம்பையில் நீராடும் போது பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைகளை நதியில் விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதால், கேரள அரசு இன்று (நவம்பர் 23) முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி பம்பை நதியில் ஆடைகளை விட்டுச் சென்றாலோ, கழிவுகளை விட்டுச் சென்றாலோ ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.5,000 விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்பையில் திடக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மட்கும் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பம்பை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் கேரள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அபராதம் மட்டுமின்றி முன்பதிவு தொடர்பான மற்றுமொரு முக்கிய அறிவிப்பை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமைலையில் ஒரே நாளில் அதிக பக்தர்கள் வருவதைத் தடுக்க முன்பதிவு முறை அமலில் இருக்கிறது. இதன்மூலம் ஒரு நாளைக்கு 80,000 பக்தர்களுக்கு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதுதவிர நிலக்கல்லில் நேரடியாக 10,000 பக்தர்களுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் நடை திறந்த பிறகு, முன்பதிவு செய்த பக்தர்களில் பலர் சபரிமலைக்கு வரவில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை நெறிப்படுத்தவும் ஆன்லைன் முன்பதிவில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தேவஸ்தானம். இதன்படி குறிப்பிட்ட தேதியில் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள், அந்த தேதியில் சபரிமலைக்கு வர வேண்டும். அப்படி வரவில்லை எனில் மீண்டும் அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாது.
முன்பதிவு செய்து விட்டு பக்தர்கள் வராமல் இருப்பதால், அதே தேதயில் முன்பதிவு செய்ய முடியாமல் போன் பக்தர்கள் பாதிக்கப்படுவதுண்டு. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பின் மூலம் ஏஜெண்டுகள் மூலம் முன்பதிவு செய்வது தடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதோடு உண்மையான ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஐயப்ப பக்தர்களின் நலன் காக்க எல்ஐசி உடன் கைகோர்த்த திருவிதாங்கூர் தேவஸ்தானம், பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனில் அக்கறை காட்டுவதோடு மட்டுமின்றி, சபரிமலை சன்னிதானத்தை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சியை தேவஸ்தானமும், கேரள அரசும் எடுத்து வருகிறது. இதன்படி தான் பம்பை நதியில் துணிகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பொதுவாகவே பம்பையில் துணிகளை வீசினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஐயப்ப பக்தர்களுக்கு உண்டு. இதனால் தான் பலரும் ஆடைகளை வீசுகின்றனர். ஆடைகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஆண்டு ஆடைகள் வீசப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.