

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் முதல் 2027-ம் ஆண்டின் மண்டல சீசன் வரையில் நடை திறக்கப்படும் நாட்கள், சிறப்பு பூஜை குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை முதல் தேதி நவம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை அன்று அமைந்துள்ளது. எனவே மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பம் கோவில் நடை கடந்த (நவம்பர்) 16-ம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
நவம்பர் 17ம் தேதியன்று புதிய மேல்சாந்திகள் பூஜை செய்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்த பிறகு, பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27-ம்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம்தேதி நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ம்தேதி நடைபெறும்.
மேலும் 20-ம்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் சீசன் நிறைவுக்கு வரும்.
2027-ம் ஆண்டு மாதப் பூஜைகள் மற்றும் சிறப்பு விழாக்கள் :
மாசி மாத பூஜைக்காக (கும்ப மாத பூஜை) சபரிமலை ஐயப்பன் கோவில் நடை (சபரிமலை நடை) பிப்ரவரி 12-ம்தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும்.
பங்குனி மாத (மீன மாத பூஜை) பூஜைக்காக மார்ச் 14-ம்தேதி முதல் 19-ம்தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறும். முன்னதாக பங்குனி ஆராட்டு திருவிழாவை (பங்குனி உத்திரம் திருவிழா 2027) முன்னிட்டு மார்ச் 12-ந்தேதி நடை திறக்கப்படும். 13-ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். 22-ந்தேதி ஆராட்டுடன் 10 நாட்கள் விழா நிறைவு பெறும்.
சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10-ம்தேதி நடை திறக்கப்படும். 15-ம்தேதி விஷு பண்டிகைக்காக சிறப்பு பூஜை நடைபெறும். இதனை தொடர்ந்து 19-ம்தேதி நடை அடைக்கப்படும்.
வைகாசி மாத (எடவம் பூஜை) பூஜைக்காக மே மாதம் 14-ம்தேதி நடை திறக்கப்பட்டு 5 நாள் பூஜைக்கு பிறகு 19-ம்தேதி நடை அடைக்கப்படும்.
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 12-ம்தேதி நடை திறக்கப்படும். 13-ம்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் நடை அடைக்கப்படும்.
ஆனி மாத (மிதுனம் பூஜை) பூஜைக்காக ஜூன் 15-ம்தேதி முதல் 20-ம்தேதி வரையும், ஆடி மாத பூஜைக்காக (கர்க்கிடம் பூஜை) ஜூலை 16-ம்தேதி முதல் 21-ம்தேதி வரையும், ஆவணி மாத (சிங்கம் பூஜை) பூஜைக்காக ஆகஸ்டு 17-ம்தேதி முதல் 22-ம்தேதி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக செப்டம்பர் 10-ம்தேதி திறக்கப்பட்டு 15-ம்தேதி அடைக்கப்படும்.
புரட்டாசி மாத (கன்னி பூஜை) பூஜைக்காக செப்டம்பர் 17-ம்தேதி முதல் 22-ம்தேதி வரையும், ஐப்பசி மாத (துலாம் பூஜை) பூஜைக்காக அக்டோபர் 17-ம்தேதி முல் 22-ம்தேதி வரையும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி (ஸ்ரீ சித்திர அஸ்தம் திருநாள்) அக்டோபர் 28-ம்தேதி நடை திறக்கப்படும். மறுநாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை அடைக்கப்படும். பின்னர் 2027 மண்டல சீசன் நவம்பர் 16-ம்தேதி ஆரம்பமாகும். மண்டல பூஜை டிசம்பர் 27-ம்தேதி நடைபெறும்.
தரிசன நேரம் & முன்பதிவு:
சீசன் நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி (அரிவராசனம்) வரை பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க (வர்ச்சுவல்-கியூ தரிசனம்) விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த வசதி இலவசமாகவே, கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. ஒரே நாளில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நடப்பு மண்டல சீசனை முன்னிட்டு சபரிமலையில் பூஜைகள் மற்றும் பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. பூஜைகளுக்கும், அறைகளுக்கும் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வதற்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் முன்பதிவு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும்.