

இன்றைய மாணவர்களில் சிலர் தங்கள் கடமையில் பொறுப்புடன் இருப்பது பாராட்டுக்குரியது. டெக்னாலஜி வளர்ந்து வரும் இக்காலத்தில் அந்த டெக்னாலஜியைக் கொண்டு தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ளும் சேலம் மாணவர் யோகபிரதீப் போன்றவர்களை பார்க்கும் போது நம் இளைஞர்களை எண்ணி பெருமை கொள்ளவே தோன்றுகிறது. யோகபிரதீப் அப்படி என்ன கண்டுபிடித்தார்?
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள எழுமாத்தனூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரின் மகன் யோகபிரதீப். வயது 21. இவர் காக்காபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை தனது புதிய கண்டுபிடிப்பு எலக்ட்ரிக்கல் கிக்ஸ் ஸ்கூட்டர் உடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் ஓட்டும் வகையில் சைக்கிள் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஸ்கூட்டரைப் பார்த்து வியந்து ரசித்த அரசு அலுவலர்களும் பொதுமக்களும் மாணவர் யோகபிரதிப்பை பாராட்டினார்கள்.
அந்த ஸ்கூட்டரை வடிவமைத்தது பற்றி மாணவன் யோகபிரதிப்பிடம் கேட்டபோது “நான் படித்துவரும் கல்லூரிக்கு 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தில்தான் செல்லமுடியும். இது சிரமமாக இருந்ததால் நாமே ஒரு எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டரைத் தயாரித்து செல்லலாம் என முடிவெடுத்து பெற்றோர் உதவியுடன் தனியாக அதனை உருவாக்கினேன்.
பேட்டரியில் இயங்கும் இந்த எலக்ட்ரிகல் ஸ்கூட்டரில் அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் 55 முதல் 60 கிலோமீட்டர் வரை தூரம் வரை ஓட்டலாம். நின்று கொண்டே ஓட்டிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளேன். இருந்தாலும் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள சீட்டை பொருத்திட வேண்டும். ஸ்கேனர் மூலம் ஸ்டார்ட் செய்யும் வகையில் சென்சார் பொருத்தி உள்ளேன்.
தற்போது எனது கைவிரல் ரேகையை கொண்டு இயக்க வழிவகை செய்துள்ளேன். இதேபோல் முகத்தை ஸ்கேன் செய்து இயக்கவும் செய்யலாம் இதனைத் தயாரிக்க ரூபாய் 30,000 செலவானது தற்போது இந்த ஸ்கூட்டரில்தான் கல்லூரிக்கு சென்று வருகிறேன். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்“ என்று கூறினார்.
புதுமையான வடிவமைப்பில் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டரைப் பார்த்ததும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த பெரும்பாலான பொதுமக்கள் அதனை கண்காட்சி போல் பார்த்தனர் சிலர் ஆர்வம் தாங்காமல் அந்த வண்டியை வாங்கி ஓட்டியும் பார்த்தனர்.
வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய வகை சக்கரங்களைக் கொண்ட எலக்ட்ரிக் கிக்ஸ் ஸ்கூட்டரை நம் நாட்டுக்கு ஏற்றவாறு பெரிய சக்கரங்களைப் பொருத்தி வடிவமைத்திருப்பது சிறப்பு. இவர் போன்ற கண்டுபிடிப்பாளர்களை அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நாடும் பயன்பெறும். உடன் இவரைப் போன்ற இளைஞர்களுக்கும் ஊக்கம் கிடைக்கும்.