

ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சாம்சங் (Samsung) மற்றும் சியோமி (Xiaomi) நிறுவனங்கள் தங்கள் 41 மாடல் போன்களின் விலையை 19% வரை உயர்த்தி உள்ளன.
இந்தியாவில் சாம்சங் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் RAM தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு காரணமாக பட்ஜெட் மற்றும் மிட்-ரெஞ்ச் (Mid-range) ஸ்மார்ட்போன்களின் விலையை 19% வரை உயர்த்தியுள்ளன. இதன்காரணமாக 41-க்கும் மேற்பட்ட போன்களின் விலை மாடல்களை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சாம்சங்கின் 22 மாடல்களும், சியோமியின் 19 மாடல்களும் அடங்கும். இந்த விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்த விலை உயர்வு நவம்பர் 16-ம்தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெமரி உதிரிபாகங்கள், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு, ஏற்கனவே மந்தமாக இருக்கும் ரீடைல் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புதிய போன் வாங்குவோரின் மாதாந்திர பட்ஜெட் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மொபைல் வாங்குவதைத் திட்டமிட்டிருந்த பலருக்கு இந்த விலை ஏற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் மற்ற நிறுவனங்களும் இதேபோல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
சாம்சங் மாடல்களில், கேலக்ஸி A07 5G-யின் இரண்டு வேரியண்டுகளின் விலையும் ரூ. 2,000 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 4GB+128GB மாடலின் விலை ரூ. 20,999-லிருந்து ரூ. 22,999-ஆக உயர்ந்துள்ளது. கேலக்ஸி F17 5G மற்றும் A17 5G மாடல்களின் விலைகளிலும் ரூ. 2,000 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி A57 வேரியண்டுகளின் விலை ரூ. 4,000 அதிகரித்துள்ளது, அதே சமயம் A36, A56 மற்றும் A37 சீரிஸ் மாடல்களின் விலைகளில் ரூ. 2,000 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை சில்லறை விற்பனைச் சந்தையில் ரூ. 20,000-க்கும் மேல் சென்றுள்ளது. இதனால், ரூ.20,000-க்குக் குறைவான பிரிவில் சாம்சங் போன்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
முன்னதாக ரூ. 20,000-க்குள் கிடைத்த Galaxy M17 5G (தற்போது ₹21,999 முதல்), Galaxy A07 5G (₹22,999), Galaxy M17e 5G (₹20,499) மற்றும் Galaxy F70e 5G (₹20,499) ஆகியவை விலை உயர்வால் இந்தப் பிரிவை விட்டு வெளியேறியுள்ளன.
தற்போது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற தளங்களில் பழைய ஸ்டாக்குகள் (Old Stock), 4G மாடல்கள் (Galaxy M07, M08 LTE, A08 LTE) மற்றும் சலுகை விலையில் கிடைக்கும் சில மாடல்கள் மட்டுமே ரூ.20,000-க்குக் கீழ் எஞ்சியுள்ளன.
சியோமி (Xiaomi) நிறுவனத்தைப் பொறுத்தவரை, ரெட்மி ஏ7 புரோ 5ஜி (Redmi A7 Pro 5G - 4GB+128GB) மாடலின் விலை ரூ. 15,999-லிருந்து ரூ. 18,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இது 18.75 சதவீத உயர்வாகும்.
ரெட்மி நோட் 17 5ஜி (Redmi Note 17 5G) மாடல்களின் விலை ரூ. 3,000-ம், நோட் 17 புரோ 5ஜி (Note 17 Pro 5G) மாடல்களின் விலை ரூ. 4,000-ம் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் மொத்தம் 19 மாடல்களில், சராசரி விலை உயர்வு 10.02 சதவீதமாக உள்ளது.
ஸ்மார்ட்போன் விலை உயர்வு குறித்த முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
* மாடல்கள் மற்றும் சேமிப்பகத் திறனுக்கு (Storage variants) ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை (அதிகபட்சமாக 18.75% / ~19% வரை) விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சாம்சங் நிறுவனத்தின் Galaxy A, F மற்றும் M சீரிஸ்களில் சுமார் 22 முதல் 29 வேரியண்ட்களும், சியோமி நிறுவனத்தின் Redmi வரிசையில் 19 வேரியண்ட்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
* சாம்சங் தரப்பில் Galaxy A07 5G, A17 5G, A36, A37, A56, A57, M17 5G மற்றும் F17 5G ஆகிய மாடல்களும், சியோமி தரப்பில் Redmi A7 Pro 5G, Redmi 15 5G மற்றும் Redmi Note 17 Pro 5G ஆகிய மாடல்களும் இதில் அடங்கும்.
* சாம்சங் தனது செல்போன்களின் விலையை 3.13 சதவீதம் முதல் 9.52 சதவீதம் வரையிலும், சியோமி 4.26 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரையிலும் உயர்த்தி உள்ளது.
* செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகள் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான மெமரி சிப்களின் தேவை உலகளவில் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஸ்மார்ட்போன்களுக்கான DRAM மற்றும் Flash சேமிப்பக சிப்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
* மெமரி சிப்களின் விலை கடந்த ஆண்டை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றத்தாலும், குறைந்த லாப வரம்பைக் கொண்ட பட்ஜெட் மற்றும் மிட்-ரெஞ்ச் போன்களின் கூடுதல் செலவை நிறுவனங்களால் ஈடுகட்ட முடியவில்லை.
- இந்திய சந்தையில் பெரும் வர்த்தக சந்தை கொண்ச சாம்சங், சியோமி நிறுவனங்கள், தீபாவளி பண்டிகைக் கால விற்பனை முடிந்த கையோடு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Oppo, Vivo மற்றும் Realme போன்ற பிற நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போனின் விலையை விரைவில் உயர்த்தக்கூடும் எனத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.