

நாளை சூரிய குடும்பத்தின் அழகிய கிரகமான சனி கிரகம் விண்வெளியில் வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கப் போகிறது.நாளை மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வு உச்சத்தை அடையும். அப்போது பூமிக்கும் சனி கிரகத்திற்கும் இடையிலான இடைவெளி சுமார் 12.6 கோடி கிலோமீட்டராக இருக்கும்.
பூமி, சூரியனுக்கும் சனி கிரகத்திற்கும் நேர் நடுவே வரும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.சனி கிரகத்தை மிகத் தெளிவாகவும், பிரகாசமாகவும் நாளை (அக் 04) பார்க்க முடியும். வெறும் கண்ணால் பார்க்கும் போது இது ஒரு பிரகாசமான புள்ளி போல மட்டுமே தெரியும். ஆனால், ஒரு சாதாரண சிறிய டெலஸ்கோப் அல்லது பிரத்யேக பைனாகுலர் மூலம் பார்த்தால் சனியின் புகழ்பெற்ற வளையங்களை காண முடியும். சூரியன் மறையும் நேரத்தில் உதித்து, சூரிய உதயம் வரை தெரியும்.அதாவது சூரியன் மறையும் நேரத்தில் உதிக்கும் சனி கிரகம், சூரிய உதயத்தின் போது மறையும்.
இந்நாளில் சனி கிரகம் 0.3 மேக்னிடியூட் பிரகாசத்துடன் மின்னும். வெறும் கண்ணால் பார்த்தால் ஒரு பிரகாசமான புள்ளி போலவும், தொலைநோக்கி (Telescope) வழியே பார்த்தால் அதன் வளையங்கள் மற்றும் நிலவுகளையும் தெளிவாகக் காண முடியும்."சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவர ஒரு வருடமும், சனி கிரகம் சுற்றிவர 29.5 ஆண்டுகளும் ஆகின்றன. பூமியின் சுற்றுப்பாதை சிறியது என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை சனியையும் சூரியனையும் பூமி கடந்து செல்லும்.
சனி கிரகத்தின் இந்த எதிர்ப்பு நிலை 378 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இதற்கு முன் 2025 செப்டம்பர் 21 அன்றும், அடுத்ததாக 2027 அக்டோபர் 16 அன்றும் இந்நிகழ்வு ஏற்படும். செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் போன்ற வெளிக்கோள்களுக்கும் இந்நிலை உண்டு.
எதிர்நிலை என்பது சனிக்கு மட்டும் உரியதல்ல. செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய அனைத்தும் எதிர்நிலையை அடையக்கூடும். வியாழன் ஏறக்குறைய ஒவ்வொரு 399 நாட்களுக்கும் ஒருமுறையும், செவ்வாய் 780 நாட்களுக்கு ஒருமுறையும் எதிர்நிலையை அடைகின்றன, ஆனால் அவை வெறும் கண்ணுக்குத் தெரிவதில்லை. பூமியும் சனியும் நீள்வட்டப் பாதைகளில் பயணிப்பதால், அவற்றுக்கு இடையேயான தூரம் மாறுபடுகிறது. சனி கிரகம் சூரியனைச் சுற்றி வரும்போது பார்க்கும் கோணம் மாறுவதால் அதன் வளையங்களின் தோற்றம் மாறுகிறது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சனியின் நீள்வட்டப் பாதை காரணமாக 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு மிகவும் அருகில் வரும் நிகழ்வு நடக்கும். கடைசியாக 2003-ல் மிக அருகில் வந்த சனி கிரகம், மீண்டும் 2032-ல் தான் மிக அருகில் வரும்.
நாளை அக்டோபர் 4 ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டின் சனி கிரகத்தைப் பார்க்க மிகச் சிறந்த நாள் என நாசா (NASA) அறிவித்துள்ளது. வானியல் ஆர்வலர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.