

நீங்கள் SBI வாடிக்கையாளரா? ஏடிஎம்கள் (ATM) அல்லது பிற வழிகள் மூலம் அடிக்கடி பணம் எடுப்பவரா? அப்படியானால், புதிய விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வரும் அக்டோபர் 1 முதல் பணம் எடுப்பது தொடர்பான விதிமுறைகளை மாற்றவுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட இலவச வரம்பிற்கு மேல் ரொக்கம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கலாம்.
அதேசமயம், இந்த விதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, வங்கிக் கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட 'அடிப்படை சேமிப்புக் கணக்கு' (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கே இந்த விதி பொருந்தும். அதன்படி, வரும் அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ (SBI) வங்கியில் வரப்போகும் முக்கிய விதி மாற்றங்கள் என்னவென்று பார்க்கலாம்.
எஸ்பிஐ-யின் அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (Basic Savings Bank Deposit - BSBD) மூலம் மாதத்திற்கு 4 முறை பணம் எடுப்பது இலவசம். ஆனால், வரும் அக்டோபர் 1-ம்தேதிக்குப் பிறகு, நிர்ணயிக்கப்பட்ட நான்கு முறை என்ற வரம்பை மீறினால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி, இந்த வரம்பை மீறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும். இதற்கு முன்பு இதற்கு ரூ.8 கட்டணமாக வசூலித்து வந்தது. அதனால், மாதத்தில் அடிக்கடி பணம் எடுக்கும் பழக்கம் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் ஆதார் மூலம் பணம் பெறும் AePS முறையும் இந்த இலவச வரம்பில் அடங்கும். இதில் எஸ்பிஐ ஏடிஎம்கள், பிற வங்கி ஏடிஎம்கள், கிளைகள் மற்றும் ஏஇபிஎஸ் பணப் பரிவர்த்தனைகள் (எஸ்பிஐ ஏடிஎம்) மூலம் செய்யப்படும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் அடங்கும். அதேநேரத்தில், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும் என SBI தெரிவித்துள்ளது.
BSBD கணக்கு என்பது, சமுதாயத்தின் ஏழ்மையான பிரிவினருக்காக பிரதானமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அடிப்படை சேமிப்புக் கணக்காகும். இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான தேவை எதுவும் இல்லை.
ஆனால் BSBD கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வேறு சேமிப்பு வங்கிக் கணக்கை வைத்திருக்கக் கூடாது.
அதேபோல் சம்பளம் பெறுவதற்காக எஸ்பிஐயில் சிறப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு மாற்றம் இருக்கிறது. மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, இதுவரை ஒரு மாதத்தில் 10 முறை வரை கட்டணம் இல்லாமல் பயன்படுத்த முடிந்தது... இனிமேல் அந்த எண்ணிக்கை 10-லிருந்து 5 முறையாக குறைகிறது. இந்த 5 முறையில் பணம் எடுப்பது மட்டுமல்ல, கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்பது போன்ற ஏடிஎம் சேவைகளும் சேரும்.
அதாவது, இந்த ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளுக்கான வரம்பு, நிதி மற்றும் நிதி சாராப் பரிவர்த்தனைகள் அடங்கும், மேலும் இவை அனைத்து மையங்களிலும் பொருந்தும்.
இலவச மாதாந்திரப் பரிவர்த்தனைகள் (5 முறை) பயன்படுத்தப்பட்ட பிறகு, தற்போதுள்ள கட்டணங்கள் பொருந்தும்.
5 முறைக்கு மேல் மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.23 + ஜிஎஸ்டி கட்டணமும், கணக்கு இருப்பை பார்ப்பது போன்ற சேவைகளுக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.11 + ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.
ஆனால், எஸ்பிஐயின் சொந்த ஏடிஎம்களை பயன்படுத்துவதில் இந்த மாற்றம் கிடையாது... மற்ற வகையான எஸ்பிஐ கணக்குகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.. அதாவது, எஸ்பிஐ ஏடிஎம்கள் மற்றும் ஏடிடபிள்யூஎம்களைப் பயன்படுத்தும் எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான தற்போதைய இலவசப் பரிவர்த்தனை வரம்பு மற்றும் கட்டணங்களும் மாற்றமின்றி தொடரும்.
எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அக்டோபர் 1 முதல் ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போதும் அல்லது பணம் எடுக்கும்போதும் இந்த மாற்றங்களை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதேசமயம், அக்டோபர் 1 முதல் கட்டணம் வரப்போகிறது என்று எல்லா எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் பயப்பட வேண்டியதில்லை. நாம் வைத்திருக்கும் கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டாலே போதும்.
கடந்த செப்டம்பர் 1 முதல் கனரா வங்கி தனது ஏடிஎம் மற்றும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்களைத் திருத்தியமைத்திருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கியும் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.