

நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் அபராதங்கள் (டிராபிக் ஃபைன்) இன்னும் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராத தொகையை மின்சாரக் கட்டணத்துடன் (EB Bill) இணைத்து வசூலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு புதிய யோசனையைத் தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பு தொடர்பான பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் இ-சல்லான் (e-Challan) மூலமாக விதிக்கப்படும் போக்குவரத்து அபராதத் தொகைகள் முறையாகச் செலுத்தப்படாமல் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளன. அதாவது நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இ-சலான் (e-Challan) மூலம் வசூலிக்கப்பட வேண்டிய போக்குவரத்து அபராதத் தொகை சுமார் ₹45,000 கோடியாக உள்ளது. ஆனால் இதில் இதுவரை ₹25,000 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு வெறும் சல்லான்களை மட்டும் வழங்குவது போதாது, அதை வசூலிப்பதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தாதவர்கள் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்து செலுத்த உத்தரவிடலாம் என்றும், மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் அனைவரும் அபராதத்தைச் செலுத்த இது வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதாவது மக்கள் போக்குவரத்து அபராதத்தைக் கட்டாவிட்டாலும், மின்சார இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள் என்ற பயத்தில் மின்சாரக் கட்டணத்தை நிச்சயம் செலுத்துவார்கள்.
எனவே, அபராதத் தொகையை மின் கட்டணத்துடன் இணைத்தால் வசூல் எளிதாகும் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
கள நிலவரத்தை வைத்து போலீசார் பணியாற்ற வேண்டும். ஆயிரம் மற்றும் லட்சம் என அபராதம் விதித்து ரசீது வழங்கலாம். ஆனால், வாகன ஓட்டிகளை செலுத்த வைப்பது தான் முக்கிய பிரச்சனை. இருப்பினும் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை தீர்க்கப்படும் வரை வாகனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது பல நிர்வாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
அதாவது, மின் கட்டண இணைப்பு தவிர, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, அபராதம் செலுத்தாத வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் (RC) புதுப்பித்தல், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், காப்பீடு (Insurance) மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) போன்ற சேவைகளை முடக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பரிவாகன் (Parivahan) தளத்தில் நிலுவையில் உள்ள சலான்களைக் கொண்ட வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.
வாகனங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும் பரிந்துரைத்த நீதிமன்றம், ஒரு வாகனத்தின் செலுத்தப்படாத மின்-சலான் இருப்பது கண்டறியப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்வது உட்பட தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கலாம் என்று கூறியது.
இது தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு யோசனை (Suggestion) மட்டுமே ஆகும்.
இது அதிகாரப்பூர்வ சட்டமாகவோ அல்லது உத்தரவாகவோ இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.