

நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியால் யுபிஐ எனும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடக்கின்றன. நமது வேலைகளை சுலபமாக்க தொழில்நுட்பம் எந்த அளவிற்கு உதவுகிறதோ, நாம் கவனமுடன் இல்லையென்றால் இதே தொழில்நுட்பத்தால் மோசடியிலும் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், அவ்வப்போது புதிய வகை மோசடிகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளில் பகுதி நேர வேலை எனக் கூறி மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றியது அம்பலமானது. இந்நிலையில் மீண்டும் ஒரு மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது மத்திய தொலைத் தொடர்புத் துறை.
பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டுகளை வாடகைக்கு வாங்கி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது. இந்த வகை மோசடி வெளிச்சத்திற்கு வந்த போது, இப்படி கூடவா ஏமாற்றுவார்கள் என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனையும் மிஞ்சும் அளவிற்கான ஒரு மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
பொதுமக்களின் சிம் கார்டு சிக்னலை முடக்கி, போலியான புதிய சிம் கார்டுகளை வாங்கி அதனைப் பயன்படுத்தி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்புத் துறை உறுதிபடுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையில், “உங்கள் மொபைலில் நீண்ட நேரமாக சிக்னல் வராமல் இருந்தாலோ அல்லது நெட்வொர்க் பிரச்சினை இருந்தாலோ சிம் ஸ்வாப் மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி உங்கள் சிம் கார்டை செயலிழக்கச் செய்து விட்டு, அதே எண்ணில் மோசடிக்காரர்கள் வேறொரு புதிய சிம் கார்டைப் பெறலாம்.
புதிய சிம் பயன்பாட்டுக்கு வரும் போது, உங்கள் போனில் உள்ள சிம் கார்டின் சிக்னல் துண்டிக்கப்படும். இந்த சமயத்தில் வங்கி மற்றும் யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கான ஓடிபி-யை எளிதாக பெற்று, பணத்தை திருடும் முயற்சி நடக்கலாம். ஆகையால் உங்கள் மொபைலில் நீண்ட நேரமாக சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக மத்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தங்களுடைய ஆவணங்களை பொது வெளியில் பகிர வேண்டாம். குறிப்பாக அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். இது வருங்காலத்தில் உங்களேக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
மோசடிகளைத் தவிர்க்க வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளைப் பயன்படுத்த மொபைலில் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதுமட்டுமின்றி நவம்பர் 1-ம் தேதி முதல் காலர் ஐடியில் டயல் செய்பவர்களின் பெயர் தெரிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மோசடிகளைத் தவிர்க்கவே மத்திய அரசு இத்தகைய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. பண மோசடியில் சிக்குவதைத் தடுக்க, பொதுமக்களும் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.