

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த SIR மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் SIR பணிக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோர்ட்டிலும் வழங்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளும் வலுத்த போதிலும் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கிய SIR பணிகள் தற்போது வரை எந்தவித தோய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIRக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்றுடன் (டிசம்பர் 11-ம்தேதி) முடிவடைகிறது. அதற்குள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட மாட்டாது.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ‘9-ந்தேதி வரை 6,40,84,624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6,38,25,877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைய உள்ள நிலையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ வினியோகிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் போது ஒவ்வொரு பி.எல்.ஓ.விற்கும் தலா 30 வீதம் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான 'படிவம் 6' மற்றும் 'படிவம் 8' வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் புதிய வாக்காளர் சேர்ப்பிற்கான படிவம் 6-ஐ வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, கணக்கீட்டு படிவங்களை பெறும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டதால் அவர்கள் கையிருப்பில் வைத்துள்ள படிவம் -6 ஐ வினியோகிக்க தொடங்கியுள்ளனர். வரும் 16-ந்தேதிக்கு பின்பு புதிய வாக்காளர் சேர்ப்பிற்கான படிவத்தை முகாம் அமைத்து வழங்கும் பணி தொடங்கும் என்று கூறினர்.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில்,SIR குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது ராகுல்காந்தி, நாட்டில் வாக்குத்திருட்டு நடக்கிறது. SIR பணியை நிறுத்த வேண்டும். வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேச விரோதச் செயல். ஆளும் பாஜகவினர் அத்தகைய தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார். இந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமித்ஷா, வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு, தங்களுக்கு ஆதரவளிக்கும் சட்டவிரோதக் குடியேறிகளை நீக்கிவிடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுவதே இதற்குக் காரணம் என்று கூறி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து விவாதத்தை முடித்தார்.