

தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு உள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகளும் அதிகளவில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்களை கொடுப்பதற்கு வருகிற 4-ந்தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் காலத்தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் கணக்கெடுப்பு படிவம் கொடுப்பதற்கான தேதியை வருகிற 11-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 7-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் SIR பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி வக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் 6.04 கோடி வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 23,01,050 லட்சம் இறந்த வாக்காளர்கள், 27,01,050 லட்சம் நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள், சுமார் 5.19 லட்சம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இது இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதால், கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்த பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த அடிப்படையில் பார்த்தால், பல்வேறு காரணங்களால் இவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும் போது சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
SIR பணியில் அரசியல் கட்சியினர் உள்ளே புகுந்து படிவங்களை விநியோகம் செய்வது, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவது, பதிவிறக்கம் செய்வது என அனைத்தையும் அவர்களை செய்கின்றனர். ஓட்டுச்சாவடி அலுவலகர்கள் வீடு, வீடாக சென்று சம்பந்தப்பட்ட வாக்காளர் இருக்கிறாரா என்பதை அறிந்து அவரிடம் கணக்கெடுப்பு படிவத்தை வழங்க வேண்டும். ஏனெனில் வாக்காளர் உண்மையில் அங்கு தான் வசிக்கிறாரா என்பதை அறிவதே இந்த பணியின் நோக்கம்.
ஆனால் அரசியல் கட்சியினர் கைகளில் படிவங்கள் சென்றதால் போனில் தொடர்ப்பு கொண்டு நேரில் வரவழைக்கின்றனர். படிவத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறுகின்றனர். இதனால் வாக்காளர்கள் கொடுத்துள்ள முகவரியில் தான் வசிக்கிறார்களாக என்பதை அறியமுடிவதில்லை.
மேலும் அரசியல் கட்சியின் நெருக்கடியின் காரணமாக மாவட்ட தேர்தல் அலுவலகர்கள் இந்த பணியில் ஆர்வம் காட்டவில்லை. பணியை முடிக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர முறையாக நடக்க விரும்பவில்லை. அதேநேரம் இப்பணி முறையாகவும், சரியாகவும் நடந்தால், நீக்கப்படும் வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.